கார் மீது லாரி மோதி விபத்து புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலி
திண்டிவனம் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். திருமணத்திற்கு இன்னும் 4 நாட்களே இருந்த நிலையில் அவர் பலியாகி இருப்பது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம்,
கடலூர் மஞ்சக்குப்பம் சுதர்சனநாயுடு தெருவை சேர்ந்தவர் காசிம். இவரது மகன் முபாரக்(வயது 24). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு வருகிற 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக முபாரக்கின் குடும்பத்தினர் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் வீட்டில் திருமண ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது.
முபாரக்கின் தம்பி சவுகத் அலி(23) குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். அவர் தனது அண்ணன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். இதையடுத்து தனது தம்பியை அழைத்து வருவதற்காக முபாரக், சென்னை விமான நிலையத்துக்கு ஒரு காரில் நேற்று காலையில் புறப்பட்டார். காரை பண்ருட்டி மேல்பட்டாம்பாக்கம் சிங்காரப்பேட்டையை சேர்ந்த ஜெகநாதன் மகன் விக்னேஷ்(25) என்பவர் ஓட்டினார்.
கார், காலை 7 மணிக்கு திண்டிவனம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, பாதிரி என்கிற இடத்தில் சென்ற போது, திடீரென டிரைவர் விக்னேசின் கட்டுப்பாட்டை இழந்த கார், தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி மறுமார்க்கத்தில் சென்னை-திருச்சி சாலையில் பாய்ந்தது.
அந்த சமயத்தில் அந்த வழியாக சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த லாரி, காரின் மீது பயங்கர சத்ததுடன் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய முபாரக், விக்னேஷ் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால், போலீஸ் இன்ஸ்பெக்டா சீனிபாபு, ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காரின் இடிபாட்டிற்குள் சிக்கி பலியான முபாரக், விக்னேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய காரை, பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் வெளியே எடுத்து, அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த முபாரக் மற்றும் விக்னேசின் குடும்பத்தினர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு அவர்கள் 2 பேரின் உடலையும் பார்த்து கதறி அழுதனர். திருமணத்துக்கு 4 நாட்களே இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலியாகி இருப்பது அவர்களது குடும்பத்தினர் உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் திருமண வீடும் களையிழந்து போய்விட்டது.
விபத்தில் பலியான விக்னேசுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இவரது மனைவி தேவி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் கணவர் இறந்து போனதால் அவரும், அவரது குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் மூழ்கி இருக்கிறார்கள். விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story