மேல்நீராறில் 208 மி.மீ. மழை: பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 8,481 கன அடி நீர்வரத்து


மேல்நீராறில் 208 மி.மீ. மழை: பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 8,481 கன அடி நீர்வரத்து
x
தினத்தந்தி 11 July 2018 9:45 PM GMT (Updated: 11 July 2018 8:55 PM GMT)

வனப்பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 481 கன அடி நீர்வரத்து உள்ளது.

பொள்ளாச்சி, 


பொள்ளாச்சி, ஆனைமலை, நெகமம், ஆழியாறு, கிணத்துக்கடவு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. பரம்பிக்குளம் அணைக்கு சோலையார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையின் மூலம் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் தினமும் ஒரு அடி வீதம் உயர்ந்து வந்தது. சோலையார் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதன் காரணமாக சோலையாரில் இருந்து பரம்பிக்குளம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 481 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக பரம்பிக்குளம் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்தது. இதனால் பி.ஏ.பி. திட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதிகபட்சமாக மேல்நீராறில் 208 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளதால் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையின் காரணமாக நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால் திடீரென்று சிறு, சிறு கற்கள் உருண்டு விழுந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரங்கு நீர்வீழ்ச்சிக்கு செல்ல நேற்று 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:-

சோலையார் 164, பரம்பிக்குளம் 12, ஆழியாறு 27, திருமூர்த்தி 12, அமராவதி 5, வால்பாறை 136, மேல்நீராறு 208, கீழ்நீராறு 154.6, காடம்பாறை 37, சர்க்கார்பதி 40, வேட்டைக்காரன்புதூர் 36, மணக்கடவு 12.4, தூணக்கடவு 61, பெருவாரிபள்ளம் 60, அப்பர் ஆழியாறு 18, நவமலை 18, பொள்ளாச்சி 31.5, நல்லாறு 26, நெகமம் 22, சுல்தான்பேட்டை 12. 

Next Story