மாவட்ட செய்திகள்

கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு + "||" + Additional water supply from KSR-Kabini dams to Tamil Nadu

கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு

கே.ஆர்.எஸ்.-கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் மொத்தமாக, தமிழகத்திற்கு வினாடிக்கு 53 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் செல்கிறது.
மைசூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்கள் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குடகு, தட்சிண கன்னடா, உடுப்பி, கார்வார், சிக்கமகளூரு, சிவமொக்கா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக கர்நாடகத்தில் உள்ள அணைகளின் முக்கிய அணைகளாக கருதப்படும் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்), கபினி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா உள்ளிட்ட அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது என்றே சொல்லலாம்.

இதில் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா அருகே காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குடகு மாவட்டம், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வயநாடு பகுதிகள் விளங்கி வருகின்றன. அப்பகுதிகளில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் காவிரியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 698 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அணை வேகமாக நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். 115.20 அடியை எட்டி இருந்தது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக உள்ளதால் விரைவில் நிரம்பிவிடும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 3,657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏறக்குறைய முழு கொள்ளளவை எட்டிவிட்ட கபினி அணையின் நீர்மட்டம் தற்போது 2,282.22 அடியாக (கடல் மட்டத்தில் இருந்து) உள்ளது. கபினி அணையின் மொத்த நீர்மட்டம் கொள்ளளவு 2,284.00 அடி ஆகும். இந்த அணை மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது. இந்த அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வயநாடு பகுதியின் மற்றொரு புறம் விளங்குகிறது. அங்கு பெய்யும் மழையானது கபிலா ஆற்றின் வழியாக கபினி அணையை வந்தடைகிறது.

நேற்றைய நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 40 ஆயிரத்து 363 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 39 ஆயிரத்து 667 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் மதியம் 4 மணிக்கு மேல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் வினாடிக்கு அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கபினி மற்றும் கே.ஆர்.எஸ். ஆகிய இவ்விரு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 53 ஆயிரத்து 657 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் இவ்விரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 40 ஆயிரத்து 446 கன அடி வீதம் தண்ணீர்தான் திறந்து விடப்பட்டு இருந்தது. நேற்று அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட அணைகளை தவிர கர்நாடகத்தில் உள்ள ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, மல்லபிரபா, நாராயணபுரா, லிங்கனமக்கி, சுபா, வரகி, அலமட்டி, கட்டபிரபா ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.