பயணிகள் எளிதாக சாலையை கடக்க சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை திறப்பு
பயணிகள் எளிதாக சாலையை கடப்பதற்காக சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு புதிதாக அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை திறக்கப்பட்டது.
சென்னை,
சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கடந்த மே 25-ந் தேதியில் இருந்து மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்துவரும் பயணிகள் பூந்தமல்லி சாலையை எளிதாக கடப்பதற்காக சென்டிரல்-மெட்ரோ ரெயில் நிலையம் இடையே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வந்தது.
இந்த சுரங்கப்பாதை நேற்று முதல் பயணிகளுக்காக திறந்துவிடப்பட்டது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
இந்த சுரங்கப்பாதையில் இரண்டு பகுதிகளிலும் 2 நகரும் படிக்கட்டுகளும், 2 படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு உள்ளன. மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக இரண்டு பகுதிகளிலும் லிப்டுகள் 3 மாதத்தில் அமைக்கப்படும்.
இதன்மூலம் சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தை அடைய 2 நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன. மேலும் 3 வாயில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. 5 நுழைவு வாயில்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
பாரிமுனையில் ராஜாஅண்ணாமலை மன்றத்தில் இருந்து பிராட்வே சிக்னல் செல்லும் சாலையும், ஐகோர்ட்டு முன்பு உள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையும் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவடைந்து வருவதால் தற்போது மீண்டும் இருவழி பாதையாக்கப்பட்டு உள்ளது.
டி.எம்.எஸ். - வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிவடைந்த உடன் அண்ணா சாலையிலும் முழுமையாக இருவழிப்பாதையில் போக்குவரத்து தொடங்கப்படும்.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் ரெயில் நிலையங்களில் உள்ள பூங்காக்களுக்கும், கழிப்பறைகளுக்கும் பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story