உரப்பூங்கா அமைக்க எதிர்ப்பு: மண்டை ஓடுகளுடன் பொதுமக்கள் முற்றுகை


உரப்பூங்கா அமைக்க எதிர்ப்பு: மண்டை ஓடுகளுடன் பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 11 July 2018 10:00 PM GMT (Updated: 11 July 2018 10:05 PM GMT)

திண்டுக்கல் மின்மயானம் அருகே உரப்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டை ஓடுகளுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

திண்டுக்கல், 


திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள சுடுகாட்டில் மின்மயானம் செயல்பட்டு வருகிறது. தற்போது, மாநகராட்சி சார்பில் சுடுகாட்டில் மக்கும் குப்பைகளை கொட்டி உரப்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கட்டிடம் கட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் பணி நேற்று நடந்தது. அப்போது, அந்த பகுதியில் ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த உடல்களின் மண்டை ஓடுகள் வெளியே வந்தன.

இதனை அறிந்த கோவிந்தாபுரம் பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பழனிசாமி, செயலாளர் தனபாலன், பொதுச்செயலாளர் முத்துராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் உள்ளிட நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். பின்னர், அந்த பகுதியில் உரப்பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கையில் மண்டை ஓடுகளுடன் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தற்போது மின்மயானத்தில் இருந்து வெளியாகும் புகையால் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்தநிலையில், குப்பைகளை குவித்து உரம் தயாரிக்கும் பூங்கா அமைத்தால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசும். மேலும், எங்களது முன்னோர்களின் சமாதிக்கு ஆண்டுதோறும் வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். தற்போது, அந்த இடத்தை தோண்டியதால் முன்னோர் களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே குடியிருப்பு இல்லாத இடத்தில் உரப்பூங்காவை அமைக்க வேண்டும் என்றனர்.

இதற்கிடையே, அங்கு வந்த மேற்கு போலீசார் உரப்பூங்கா அமைக்கும் பணியை நிறுத்த உத்தரவிட்டனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

Next Story