இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் மீது தாக்குதல்: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் மீது தாக்குதல்: போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 July 2018 3:45 AM IST (Updated: 12 July 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கம்யூனிஸ்டு கட்சி பிரமுகர் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து போடி நகர் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போடி,


போடி நகர் பழைய பஸ் நிலையம் அருகே வசிப்பவர் பிரேம்குமார் (வயது 40). இந்திய கம்யூனிஸ்டு பிரமுகர். நேற்று இரவு பழைய பஸ் நிலையத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், மோட்டார் சைக்கிளில் வந்த பிரேம்குமாரை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

ஆனால் பிரேம்குமார் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக தெரிகிறது. இதையடுத்து பின்தொடர்ந்து சென்ற போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பிரேம்குமாரை போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணைக்காக போலீசார் போடி நகர் போலீஸ் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்தனர்.

இதையறிந்த பிரேம்குமாரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சுமார் 100 பேர் திரண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் பிரேம்குமாரை விடுதலை செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் விடுவித்தனர். அதன்பின்னரே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story