உத்தமபாளையம் பேரூராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவு
உத்தமபாளையம் பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளார்.
உத்தமபாளையம்,
உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் பி.டி.ஆர்.காலனி, இந்திரநகர், தென்றல்நகர், மின்வாரியநகர், புதூர், பாதர்கான்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகாவின் தலைநகர் என்பதால் ஆர்.டி.ஓ. அலுவலகம், தாலுகா அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் என 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்களுக்கு பொதுமக்கள் பல்வேறு பணிகள் தொடர்பாக தினந்தோறும் வந்து செல்கின்றனர். உத்தமபாளையம் திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து இருப்பதால் இந்த வழியாக தான் தேக்கடி மற்றும் அய்யப்பன் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர்.
குறிப்பாக பஸ்நிறுத்தம், தேரடி, பூக்கடை வீதி, கிராமச்சாவடி, பைபாஸ் பஸ் நிறுத்தம் மற்றும் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள இடங்களில் ஆக்கிரமிப்பால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதுதவிர சாலை ஓரங்களில் பஸ்களை நிறுத்தி பயனிகளை ஏற்றுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தேனி மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர். இதையடுத்து பேரூராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற பேரூராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ் சாலைத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பேரூராட்சி செயல்அலுவலர் பாலசுப்பிரமணி கூறும்போது, ‘பேரூராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து ஏற்கனவே அளவீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து சம்பந்தபட்டவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். நோட்டீஸ் கிடைத்தவர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும்.
இல்லையெனில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், இன்னும் சில தினங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்படும் என்றார்.
Related Tags :
Next Story