சென்னை திரும்புவதற்கு முன் ராமகிருஷ்ண மடத்தின் தலைவரிடம் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்


சென்னை திரும்புவதற்கு முன் ராமகிருஷ்ண மடத்தின் தலைவரிடம் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்
x
தினத்தந்தி 12 July 2018 5:00 AM IST (Updated: 12 July 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்புவதற்கு முன்பு மேற்குவங்க மாநில ராமகிருஷ்ண மடத்தின் தலைவரிடம் நடிகர் ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.

சென்னை,

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், படப்பிடிப்பு குழுவினரோடு மேற்குவங்கத்துக்கு சென்றிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, நேற்று முன்தினம் இரவு ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

சென்னை திரும்புவதற்கு முன்னதாக மேற்குவங்க மாநிலம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு ரஜினிகாந்த் சென்று தியானத்தில் ஈடுபட்டார். அந்த மடத்தின் தலைவர் ஸ்மரனாநந்தா மகராஜை சந்தித்து ரஜினிகாந்த் ஆசி பெற்றார்.


சென்னை திரும்பிய ரஜினிகாந்தை போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. அப்போது தமிழக அரசியல் நிலவரம், ரஜினிகாந்த் அறிவிக்க உள்ள கட்சியின் பெயர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

வெளியே வந்த தமிழருவி மணியன் நிருபர்களிடம் கூறுகையில், “ஒரு மாதம் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரஜினிகாந்த் சென்னைக்கு திரும்பியிருப்பதால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன். மக்கள் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அவர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். ரஜினிகாந்த் சோர்வு எதுவும் இல்லாமல், உற்சாகமாக இருக்கிறார்” என்றார்.

Next Story