வெயில், மழைக்காலங்களில் பயணிகள் அவதி: ஓட்டை, உடைசலான பஸ் நிறுத்தங்களின் மேற்கூரைகள் சீரமைக்கப்படுமா?


வெயில், மழைக்காலங்களில் பயணிகள் அவதி: ஓட்டை, உடைசலான பஸ் நிறுத்தங்களின் மேற்கூரைகள் சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 12 July 2018 4:20 AM IST (Updated: 12 July 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டை, உடைசலான பஸ் நிறுத்தங்களின் மேற்கூரைகளால் வெயில், மழைக்காலங்களில் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்துள்ள மேற்கூரைகளை உடனடியாக சீரமைக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


சென்னை,

மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் தலைநகர் சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 688 பஸ்கள் இயக்கப் படுகின்றன. இந்த பஸ்கள் பயணிகளுக்காக நின்று செல்லும் வகையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பஸ் நிறுத்தங்கள் அடிப்படை வசதிகள் இன்றி தற்போது மதிப்பு இழந்து காணப்படுகின்றன. பல நிறுத்தங்களில் மேற்கூரைகளே இல்லாத நிலைதான் இருக்கிறது.

சில இடங்களில் பஸ் நிறுத்தங்கள், சிதிலமடைந்து கம்பிகளை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு எலும்புக்கூடாக ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. பயணிகள் அமரும் இருக்கையும் சிதைந்து கிடப்பதை காணமுடிகிறது. பெரும்பாலான பஸ் நிறுத்தங்கள் அரசியல் மற்றும் சினிமா போஸ்டர்களை இலவசமாக பிரசுரிக்கும் இடங்களாக மாறிவிட்டன.

வெயிலால் தவிக்கும் குழந்தைகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் பஸ் நிறுத்தத்தில் ஒதுங்கி கூட நிற்கமுடியாத நிலை இருக்கிறது.


மேற்கூரை இல்லாத, உடைந்த நிலையில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் சூரியனின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாததால் பகல் நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் தவித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மழைக்காலங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. ஓட்டையான மேற்கூரை வழியாக ஒழுகும் மழை நீரில் அபிஷேகம் பெறும் அவல நிலை இருக்கிறது.

கிழிந்தப்படி பஞ்சு வெளியே தெரியும் வகையில் மோசமான இருக்கைகள், துருப் பிடித்த ஜன்னல் கம்பிகள், மூடாத தானியங்கி கதவுகள் என ஆயுட்காலத்தை தாண்டிய சில பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பயணிகள் கடுமையான அவதிக்கு உள்ளாகும் நிலை இருந்து வருகிறது.

நகைச்சுவை நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் பஸ் நிறுத்தத்துக்கு ஓடிச்சென்று அங்குள்ளவர்களிடம் ‘23-சி பஸ் இங்கே தானே வரும், இதுதானே பஸ் ஸ்டாப்? என்று கேட்டுவிட்டு, பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் தள்ளிச்சென்று நிற்பார்’. ‘என்ன இது பஸ் ஸ்டாப் இங்கே தானேனு கேட்டுட்டு அங்கே போய் நிற்கிறான்... முட்டாள்’, என்று அவரை பஸ் நிறுத்தத்தில் நிற்பவர்கள் கேலி செய்வார்கள். ஆனால் விவேக் நிற்கும் இடத்தில் தான் பஸ் சென்று நிற்கும். அப்போது, ‘யாருடா முட்டாள்... பீக் ஹவர்ஸ்ல எந்த பஸ்டா ஸ்டாப்ல நிக்குது’, என்று விவேக் வேடிக்கையாக சொல்வார்.

இன்றைக்கு அதே நிலைமை தான் சென்னையில் நடக்கிறது. பஸ் நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நிற்பதே இல்லை. கூட்ட நெரிசலை சமாளிக்க பஸ் ஸ்டாப்புக்கு சில அடி தூரம் முன்போ, பின்னாலேயோ பஸ்களை டிரைவர்கள் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் பயணிகள் ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள் கடும் சிரமத்தை சந்திக்கவேண்டியது உள்ளது.

இதேபோல பெரும்பாலான பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் செல்லும் வழித்தட எண், செல்லும் இடம், எந்த வழியாக செல்கிறது? போன்ற விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. இதனால் சென்னைக்கு புதிதாக வருபவர்கள், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு புதிதாக செல்பவர்கள் பஸ் ஏறிச்செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இதனால் பஸ்கள் செல்லும் வழித்தடம் தொடர்பான விவரங்களை பஸ் நிறுத்தங்களில் ஒட்டவேண்டும்.

இதேபோல மேற்கூரை இல்லாத, ஓட்டை, உடைசலாக உள்ள பஸ் நிறுத்தங்களை சீரமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக எடுக்கவேண்டும். மேலும் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுக்கவேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story