திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு


திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 12 July 2018 3:45 AM IST (Updated: 12 July 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் 5 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்புக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை வகித்து பேசினார். கலெக்டர் கந்தசாமி வரவேற்றார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார். பள்ளி மாணவர்களுக்கு 14 பொருட்களை வழங்கினார். பல கோடிகள் ஒதுக்கி நலத்திட்டங்களை கொண்டு வந்தார். தற்போதைய அரசும், இந்த ஆண்டு ரூ.27 கோடியே 25 லட்சத்து 88 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது 4-ல் ஒரு பகுதி ஒதுக்கிய நிதியாகும்.

இந்த அரசின் நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 68 கல்வி மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் பல வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் நீங்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, சிறிய தவறு ஏற்பட்டால் அதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கூடாது. முதலில் நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

ஏன் என்றால் தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. சிறிய தண்டனைக்காக நல்ல அதிகாரியை நாம் இழந்து விடக்கூடாது. மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வட்டார கல்வி அலுவலர்களுக்கும் வாகனங்கள் வழங்குவது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது.

வட்டார கல்வி அலுவலர்களுக்கு பணிபுரியும் இடத்தில் அலுவலகங்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

நீங்கள், கட்டிடங்கள் இருக்கிறதா? கழிப்பிடம் உள்ளதா? மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்களா? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். பெற்றோர் ஆசிரியர் சங்கம் சரியாக செயல்படவில்லை என்றால் எங்களது கவனத்துக்கு கொண்டு வாருங்கள். அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

3 ஆயிரம் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரும் திட்டத்தை அறிவித்திருக்கிறோம். அடுத்தவாரம் இந்த பணிகள் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்பந்த வேலைகள் நடைபெற்று வருகிறது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை கணினிமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் செப்டம்பர் மாதத்திற்குள் பள்ளியில் மாணவர்கள் அதிகமாக சேர்ந்தால் மீண்டும் அவர்கள் அதேபள்ளியில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 848 பள்ளிகளில் 10 பேருக்கும் குறைவாக உள்ளனர். வட்டார கல்விஅலுவலர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று பணியாற்றலாம். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. நீங்கள் விரும்பும் பகுதிக்கு உங்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இந்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. இந்த மாத இறுதிக்குள் 5 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படும்.

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பெரிய பிரச்சினை கழிவறைகளை சுத்தம் செய்வது. இதை போக்க, ஜெர்மனி நாட்டில் இருந்து ஆயிரம் வாகனங்களை ரோட்டரி சங்கத்தோடு இணைந்து இறக்குமதி செய்ய உள்ளோம். இந்த வாகனங்கள் 20 ஆயிரம் பள்ளிகளை சுத்தம் செய்யும். இதுகுறித்து உடனடியாக கல்வித்துறைக்கு தகவல் அனுப்பும் வசதியும் முதல்- அமைச்சர் ஒப்புதலோடு செயல்படுத்தப்படும்.

மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு வருகை குறித்து பெற்றோருக்கு குறுந்தகவல் அனுப்பும் திட்டம் கொண்டு வரப்படும். புதிய ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பேசினார்.


இதையடுத்து 21 ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ விருதுகளையும், 13 பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதும் அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பெருமாள்நகர் கே.ராஜன், எம்.பி.க்கள் வனரோஜா, சேவல் வெ.ஏழுமலை, எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், தூசி கே.மோகன் மற்றும் 5 மாவட்ட கல்வி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story