போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: கோர்ட்டை அவமதித்ததாக 3 பேர் ஜெயிலில் அடைப்பு
போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் தொடர்புடையவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தனர். அவர்களது ஜாமீனை ரத்து செய்த நீதிபதி, கோர்ட்டை அவமதித்த குற்றத்துக்காக ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
வேலூர்,
வேலூர் வடக்கு போலீசார் கடந்த 2014-ம் ஆண்டு வேலூர் எல்.ஐ.சி. காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில், அவர்கள் சலவன்பேட்டையை சேர்ந்த சரண்ராஜ், சத்யா, ஆனந்தன், சரத் என தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியபோது, 4 பேரும் சேர்ந்து திடீரென ஒரு போலீஸ்காரரை தாக்கி உள்ளனர்.
இதுதொடர்பாக வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் அண்ணாமலை ஆஜரானார். இதற்கிடையே ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த 4 பேரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை கோர்ட்டுக்கு வரும்போதெல்லாம் ஜாமீனில் வெளியே வந்த 4 பேரும் ஆஜராகவில்லை. இதையடுத்து 4 பேரும் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கூடுதல் விரைவு நீதிமன்ற நீதிபதி குணசேகர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. சரண்ராஜ், சத்யா, ஆனந்தன் ஆகிய 3 பேர் மட்டுமே நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். சரத் ஆஜராகவில்லை. இதனை விசாரித்த நீதிபதி வழக்கின் விசாரணைக்கு 4 பேரும் முழு ஒத்துழைப்பு அளிக்காமல், விசாரணையின்போது ஆஜராகாமல் நீதிமன்றத்தை அவமதித்ததாக கருதி 4 பேரின் ஜாமீனை ரத்து செய்தார்.
இதையடுத்து சரண்ராஜா, சத்யா, ஆனந்தன் ஆகிய 3 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைக்கவும், ஆஜராகாத சரத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார். அதன்பேரில் இவர்கள் 3 பேரையும் ஆயுதப்படை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
Related Tags :
Next Story