மதுபோதையில் காரை ஓட்டி வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதிய தியேட்டர் உரிமையாளருக்கு தர்ம அடி
அனுப்பர்பாளையத்தில் மது போதையில் காரில் வந்து மோட்டார்சைக்கிள் மீது மோதிய தியேட்டர் உரிமையாளருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த பனியன் நிறுவன என்ஜினீயர் படுகாயம் அடைந்தார்.
அனுப்பர்பாளையம்,
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே உள்ள சுகம் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (வயது 61). இவர் திருப்பூர் அவினாசி ரோட்டில் எஸ்.ஏ.பி.தியேட்டர் வைத்து நடத்திவருகிறார்.
இந்தநிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் தியேட்டரில் இருந்து தனது காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. அவரது கார் பெரியார் காலனி சந்திப்பு அருகில் திரும்பிய போது எதிரே வந்த ஒரு மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த அவினாசி ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வரும் பிரபாகரன் (27) என்பவர் பலத்த காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் பாலதண்டாயுதபாணி காரை அங்கிருந்து எடுத்துச்சென்றார்.
ஆனால் காரின் பின்பகுதியில் மோட்டார்சைக்கிள் சிக்கியிருந்ததால் கார் மோட்டார்சைக்கிளை இழுத்தபடி சென்றது. இதனால் பொதுமக்கள் அந்த காரை இருசக்கர வாகனங்களில் விரட்டிச்சென்றனர். பின்னர் சிறிது தூரத்தில் காரை சுற்றிவளைத்த பொதுமக்கள் காரில் இருந்த பாலதண்டாயுதபாணியை தர்மஅடி கொடுத்தனர். அத்துடன் காரையும் சேதப்படுத்தினார்கள். இதில் காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன.
இந்த விபத்து பற்றிய தகவல்கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் விரைந்து வந்து பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பாலதண்டா யுதபாணியை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story