மைல்கல் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மருந்துக்கடை உரிமையாளர் பரிதாப சாவு


மைல்கல் மீது மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் மருந்துக்கடை உரிமையாளர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 12 July 2018 3:45 AM IST (Updated: 12 July 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது சாலையோர மைல்கல் மீது மோட்டார்சைக்கிள் மோதி கவிழ்ந்த விபத்தில் மருந்துக்கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். உடன் சென்ற அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

காங்கேயம், 

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள எழுமாத்தூர் வாய்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் அசோக் (வயது 24). இவர் மொடக்குறிச்சியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி கஸ்தூரி (21). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு ஆண்டு ஆகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இருவரும் மோட்டார்சைக்கிளில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமி தரிசனம் முடிந்து மீண்டும் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார்சைக்கிளை அசோக் ஓட்டிச்சென்றார். பின்னால் கஸ்தூரி அமர்ந்திருந்தார். நேற்று மதியம் 12 மணி அளவில் காங்கேயத்தை அடுத்த பாப்பினி பகுதியில் ஐவர்ராஜாக்கள் கோவில் அருகே உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மைல்கல்மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அசோக் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். இதுபோல் கஸ்தூரியும் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து காரணமாக அந்தபகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அசோக் பரிதாபமாக இறந்தார். கஸ்தூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story