பரங்கிமலையில் சமையல் கியாஸ் கசிவால் தீ விபத்து; பெண் பலி 4 பேர் க ாயம்


பரங்கிமலையில் சமையல் கியாஸ் கசிவால் தீ விபத்து; பெண் பலி 4 பேர் க ாயம்
x
தினத்தந்தி 12 July 2018 5:08 AM IST (Updated: 12 July 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிமலையில், வீட்டில் பரவி இருந்த சமையல் கியாஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை மத்தியாஸ் நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 30). இவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ரேகா (28). இவர்களுக்கு ரோசன் (5) என்ற மகனும், 1½ வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இவர்களுடன் கணேசின் தந்தை குமார் (55), தாய் அலமேலு (50) ஆகியோர் வசித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி விட்டனர். அப்போது கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, சமையல் அறை மற்றும் ஹாலில் கியாஸ் பரவி இருந்தது.

நேற்று அதிகாலையில் எழுந்த ரேகா, கியாஸ் பரவி இருப்பதை அறியாமல், ஹாலில் உள்ள மின்சார சுவிட்ச்சை போட்டார். அப்போது குப்பென்று தீப்பிடித்து, ரேகா உடலில் தீப்பிடித்து எரிந்தது. அவர் வலியால் அலறினார்.

ரேகாவின் அலறல் சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த கணேஷ், குமார், அலமேலு, ரோசன் ஆகியோர் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களும் தீக்காயம் அடைந்தனர்.


இதையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ரேகா உடலில் எரிந்த தீயை அணைத்தனர். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ரேகா மற்றும் தீக்காயம் அடைந்த கணேஷ், குமார், அலமேலு, ரோசன் ஆகியோரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரேகா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த விபத்தில் வீட்டின் கதவு, ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. இதுபற்றி பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தில் கணேசும், ரோசனும் லேசான காயங்கள் அடைந்து உள்ளதாகவும், குமார், அலமேலு இருவரும் பலத்த காயம் அடைந்து உள்ளதாகவும், 1½ வயது பெண் குழந்தை காயம் ஏதுமின்றி உயிர் தப்பியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story