போட்டித்தேர்வை எழுதாமல் அரசு பணிக்கு செல்ல முடியாது மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி தகவல்


போட்டித்தேர்வை எழுதாமல் அரசு பணிக்கு செல்ல முடியாது மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 July 2018 10:15 PM GMT (Updated: 11 July 2018 11:44 PM GMT)

போட்டித்தேர்வை எழுதாமல் அரசு பணிக்கு செல்ல முடியாது என்று எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ரமேஷ்குமார் கூறினார்.

திருப்பூர், 

தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தொழில்நெறி மற்றும் திறன் விழிப்புணர்வு வாரவிழாவையொட்டி திருப்பூர் எல்.ஆர்.ஜி.அரசு மகளிர் கலைக்கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராசிரியை நிர்மலா தலைமை தாங்கினார். தொழில் நெறி மற்றும் திறன் மேம்பாட்டில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பங்கு என்ற தலைப்பில் இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் பேசினார். அரசு வேலைவாய்ப்புகள் குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ரமேஷ்குமார் பேசியதாவது:-

கல்லூரியில் படித்து வரும் மாணவிகளாகிய நீங்கள் மேற்கொண்டு படிப்பதா? அல்லது வேலைக்கு செல்வதா? என்பது போன்ற பல்வேறு யோசனைகளுடன் இருப்பீர்கள். அரசு வேலைக்கு செல்ல விரும்பினால் நீங்கள் கண்டிப்பாக போட்டித்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி.-க்கு கீழ் படித்திருப்பவர்களுக்கு போட்டித்தேர்வு தேவையில்லை. அவர்கள் காவலாளி, அலுவலக உதவியாளர் போன்ற வேலைகளில் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள். மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

பிளஸ்-2 வகுப்புக்கு மேல் படித்தவர்கள் போட்டித்தேர்வை எழுதாமல் அரசு பணியில் சேர முடியாது. சொந்த தொழில் செய்ய விரும்புவோருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் விரும்புகின்ற தையல், அழகு கலை போன்ற எந்த துறையானாலும் அந்த துறையை சேர்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி காலமான 60 நாட்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவி தொகையும் வழங்கப்படும்.

இதை தவிர தனியார் துறையில் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முகாம்கள் நடத்துகிறோம். 3 மாதத்துக்கு ஒரு முறை கல்லூரிகளில் பெரிய அளவில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்துகிறோம். அதில் 50-க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இதுவும் உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

இன்னும் 2 நாட்களில் குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. உங்கள் கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுத்தால் அந்த தேர்வுக்காக நாங்கள் உங்கள் கல்லூரியில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிவரை பயிற்சி அளிக்கிறோம். அதற்காக சுமார் 400 புத்தகங்கள் வரை இலவசமாக கொடுக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பின்னர் கல்லூரி பேராசிரியர் புவனேஷ்வர் அரசு வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி குறித்து பேசினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள், இளங்கலை 3-ம் ஆண்டு படிக்கும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.

அதே போல் திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்தரங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் தெய்வீகன் தொடங்கி வைத்தார். இதில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு ஒருவர் வீதம் கலந்து கொண்டனர்.

அவர்களிடையே மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரி ரமேஷ்குமார் பேசும் போது, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம். போட்டித்தேர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது, எந்த படிப்பை தேர்வு செய்து படித்தால் வேலைவாய்ப்புக்கு அதிக வாய்ப்புள்ளது என்பது குறித்து விளக்கி பேசினார். மேலும் இந்த கருத்துகளை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைய உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

Next Story