உதவி நூலகர் கொலை வழக்கு: கம்ப்யூட்டர் சென்டர் ஊழியருக்கு ஆயுள் தண்டனை


உதவி நூலகர் கொலை வழக்கு: கம்ப்யூட்டர் சென்டர் ஊழியருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 11 July 2018 10:30 PM GMT (Updated: 12 July 2018 12:10 AM GMT)

புதுவையில் உதவி நூலகர் கொலை வழக்கில் கம்ப்யூட்டர் சென்டர் ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

புதுச்சேரி, 

புதுவை அரியாங்குப்பம் காந்திஜி நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அரியாங்குப்பத்தில் உள்ள நூலகத்தில் உதவி நூலகராக பணியாற்றி வந்தார். முன்னாள் ஊர்க்காவல் படை வீரர் ஆவார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் ராமச்சந்திரன் தனக்கு சொந்தமான முதலியார்பேட்டை விடுதலை நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமிர்தராஜ் என்பவருக்கு போகியத்திற்கு வழங்கினார். அந்த வீட்டை அமிர்தராஜ், முருங்கப்பாக்கம் சுதானா நகரை சேர்ந்த குப்பு என்பவருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த ராமச்சந்திரன் புதுச்சேரி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்ற உத்தரவின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி அமிர்தராஜ், குப்பு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதையடுத்து முதலியார்பேட்டை போலீசார் குப்புவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த குப்புவின் மகனான கம்ப்யூட்டர் சென்டர் ஊழியர் அண்ணாமலை என்கிற பிரகாஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 3.1.2010 அன்று ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று அவரை வெட்டிக்கொலை செய்தார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணாமலை மற்றும் அவரது நண்பர்கள் வானரப்பேட்டை குமரன், அன்பு என்கிற அன்பழகன், சிலம்பரசன், மேட்டுப்பாளையம் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு புதுச்சேரி 3-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சுபா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய அண்ணாமலைக்கு (வயது 38) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவருடைய நண்பர்கள் குமரன், அன்பு, சிலம்பரசன், சுரேஷ் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பெருமாள் ஆஜரானார். 

Next Story