மாவட்ட செய்திகள்

கடலில் போராட்டம்...! கண்ணில் நீரோட்டம்...! + "||" + Fight in the sea

கடலில் போராட்டம்...! கண்ணில் நீரோட்டம்...!

கடலில் போராட்டம்...! கண்ணில் நீரோட்டம்...!
சுருட்டி அடிக்கும் அலை மீது துடுப்பிட்டால் தான் குடும்பம் பசியாறும். கடலுக்குள் சென்றவர்கள் கரை வந்து சேர்ந்தால்தான் உறவுகள் இளைப்பாறும். இதுதான் மீனவர்களின் நிலை.
இயற்கைக்கு மட்டுமல்ல, இலங்கைக்கும் அச்சப்பட வேண்டிய அவலநிலை தமிழக மீனவர்களுக்கு தொடர்கதையாகி விட்டது. இந்தியாவில் பிற மாநில மீனவர்கள் சுதந்திரமாக கடலில் மீன்பிடிக்கின்றனர். ஆனால் கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் பல்வேறு துயரத்துக்கு ஆளாகி கண்ணீரில் தத்தளித்து கொண்டிருக்கின்றனர்.

தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதற்கு, இலங்கை கடற்படையினரே முழு முதற்காரணம். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, நம் மீனவர்களுக்கு பல்வேறு தொல்லைகளை அவர்கள் கொடுத்து வருகின்றனர். கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்கள் நிம்மதியாக கரை திரும்புவது நிரந்தரம் இல்லாத ஒன்றாகி விட்டது.

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி குண்டுகள் துளைத்து, தமிழக மீனவர்கள் பலர் தங்களது இன்னுயிரை இழந்திருப்பது கடந்த காலத்தின் கறை படிந்த வரலாறு. அடி-உதை வாங்குவது, உயிருக்கு பயந்து உடமைகளை இழப்பது தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. வலையை கிழித்து, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுவிழக்க செய்வது இலங்கை கடற்படையினருக்கு வாடிக்கை.

படகுகளை உடைத்து பயமுறுத்தும் சம்பவம் அடிக்கடி அரங்கேறுகிறது. இலங்கை கடற்படையினர், இதுவரை 187 விசைப்படகுகளை சிறைப்பிடித்து வைத்துள்ளனர். அதனை மீட்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கை காலப்போக்கில் காணாமல் போய்விட்டது. தற்போது அந்த படகுகள், பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமாகி இருக்கிறது.

நட்பு நாடு என்ற போர்வையில், இலங்கை எனும் குட்டி நாடு செய்யும் குறும்புக்கு எல்லையில்லாமல் போய் கொண்டிருக்கிறது. இதனை தட்டி கேட்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை என்பது தமிழக மீனவர்களின் குற்றச்சாட்டு. கடலில் எதிர்நீச்சல் போடும் தங்களுக்கு, இலங்கை கடற்படையினரிடம் சிக்காமல் இருப்பது பெரிய சவால் தான் என்று தமிழக மீனவர்கள் புலம்புகின்றனர்.

சமீபகாலமாக, இலங்கை கடற்படையினரின் சித்ரவதை சிகரத்தை தொட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மிகவும் மோசமாக நடத்தி, மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். வருங்காலத்தில் மீன்பிடிக்க யாரும் வரக் கூடாது என்பதை நோக்கமாக கொண்டு பயமுறுத்தும் களப்பணியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.

அதாவது, சமீபத்தில் நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகில் ஏறி கண்மூடித்தனமாக தாக்கினர். ஜி.பி.எஸ். கருவி, டார்ச் லைட் ஆகியவற்றை உடைத்தனர். வலைகளை அறுத்து எறிந்தனர். வயர்களால் நம் மீனவர்களை தாக்கினர்.

இதுமட்டுமின்றி ஐஸ்கட்டியை தலையில் வைத்தும், அதில் உட்கார வைத்தும் சித்ரவதை செய்தது மீனவர்களின் நெஞ்சில் நீங்காத வடுவாகி விட்டது. இலங்கைக்கு இழுத்து சென்ற மீனவர்களை, இனி இந்த பக்கம் மீன்பிடிக்க வரமாட்டோம் என்று கெஞ்சியதன் பேரில் விட்டு சென்றிருக்கிறார்கள்.

இதேநிலை தான் புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நெல்லை, சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

தமிழக மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்படும்போதெல்லாம் அரசியல் கட்சியினர், அறிக்கைகளை விடுத்து விட்டு அமைதியாகிவிடுவார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண்பது குதிரைக்கொம்பாகவே இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே சொந்தமாக்கி இருக்கிறது. இதனால் தமிழக மீனவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.

இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் தொடர்ந்தால், தமிழகத்தில் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. ஒரு கட்டத்தில், அந்த தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மீனவர்கள் செல்லும் நிலை ஏற்படும். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிற இலங்கை கடற்படையினரை தட்டிக்கேட்க மத்திய அரசு தயக்கம் காட்டுவது புரியாத புதிராகவே உள்ளது.

இதனை, தமிழக மீனவர்களுக்கான பிரச்சினையாக மட்டும் மத்திய அரசு கருதுகிறதோ? என்று எண்ணம் எழுந்துள்ளது. இந்தியா என்ற கூட்டுக்குடும்பத்தில் தமிழக மீனவர்களும் ஒரு அங்கம் தான். எனவே இந்தியா-இலங்கை என்ற 2 நாடுகளுக்கான பிரச்சினையாக மத்திய அரசு நினைக்க வேண்டும். இலங்கையுடன் சமரசம் செய்து கொள்ளாமல் அதனை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் ஏற்படும் அவமானம் என்று மத்திய அரசு கருத வேண்டும். தமிழகத்தை தவிர பிற மாநில மீனவர்கள் இதுபோன்ற தொல்லைக்கு ஆளாகும் பட்சத்தில், மத்திய அரசின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வி தமிழக மீனவர்களின் நெஞ்சத்தில் நிழலாடி கொண்டிருக்கிறது.

இலங்கையை தட்டிக்கேட்க ஆளில்லாததால், அனாதைகளை போல தமிழக மீனவர்கள் தவித்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அரவணைக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. பல ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இலங்கை கடற்படையால் கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதலை இனியும் சகித்து கொண்டிருக்கக்கூடாது. அனுதினமும் கடலில் போராட்டம், கண்ணில் நீரோட்டம் என மீளாத்துயரில் மிதக்கும் மீனவர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் களம் இறங்குமா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். 

ஆசிரியரின் தேர்வுகள்...