நெல்லை தந்த வில்லை நினைப்போம்
திருநெல்வேலிச் சீமைக்கு நிரந்தரப் புகழ் தந்துகொண்டிருக்கும் வில்லுப்பாட்டு மிக அற்புதமான கலை. நம் முன்னோர்களின் கிராமிய முற்றங்களில், கோவில்களில், சந்தைகளில் பிறந்தது. பாண்டிய நாட்டு முன்னோர்களின் சொத்து.
பாண்டிய மன்னர்கள் வில்லிசையை கலையாக வணங்கி வளர்த்தார்கள். இந்தக் கலை பிறந்த வரலாறு சுவாரசியமானது.
வேட்டைக்குச் சென்ற சிற்றரசனின் மனதில் ஒரு சிந்தனை துளிர்விடுகிறது. விலங்குகளை கொன்று பாவகாரியம் செய்துவிட்டேன். இதற்கு பரிகாரம் தேட வேண்டும். அதற்கு தக்க ஆலோசனை கூறும்படி அமைச்சரிடம் கேட்டார்.
‘தமிழில் பாடினால் பண்ணிய பாவம் தீரும் அரசே’ என்று அமைச்சர் பதில் அளித்தார். உடனே அரசர், கொலைக் கருவியான வில், அம்பை கலைக் கருவியாக மாற்றினார். காட்டில் தேன் எடுக்க கொண்டு செல்லப்பட்ட மண் குடம் கடமாக பயன்படுத்தப்பட்டது. தோளில் கிடந்த வில்லை, காலில் கட்டி வைத்து ஆண்டவனைப் பாடினார்.
‘தந்தனத்தம் என்று சொல்லியே வில்லிசைப் பாட வந்தருள்வாய் கலை மகளே! தான தந்தத்தோடு ஏழு சந்தங்களும் தாளத் தோடு ஆன பம்பை உருமி தக்கை துந்துபியோடு அத்தனையும் மேளத்தோடு’ என்று தொடங்கி, ‘பாடறியேன், படிப்பறியேன், பாட்டில் உள்ள வகையறியேன், ஏடறியேன், எழுத்தறியேன்’ என்று தன்னடக்கத்தோடு பாடத் தொடங்கினார். அரசர் பாடத் தொடங்கியதும் சுற்றி இருப்பவர்கள் ‘ஆமாம்’ போட்டனர்.
அன்று முதல் கிராமத் தேவதைகளை, வட்டார வீர வரலாறுகளை, உற்சாக விழாக்களில், கோவில் கொடைத் திருநாட்களில் பாடிப்பாடியே வளர்ந்த வில்லிசை காலத்தோடு கைகுலுக்கியது.
ஒரு கிராமக் கோவிலில் விடிய, விடிய வில்லுப்பாட்டுக் கச்சேரி நடந்துகொண்டே இருக்கிறது. நள்ளிரவு தாண்டியும் கூட்டம் குறையவில்லை. ஆட்டம், பாட்டம், உற்சாகம் உச்சத்துக்கே வந்தது. கோவில் உள்ளே அம்மன் சன்னதியில் உள்ள விளக்கின் எண்ணெய் எல்லாம் ஒளி குறைந்து திரி கருகிக் கொண்டு இருந்தது. சிலர் இதையும் பார்த்தவராக கதையை கேட்டுக் கொண்டு இருந்தனர். வில்லிசை புலவருக்கு நிகழ்வு புரிகிறது.
தாம் பாடும் ஒரு பாடலின் மூலமாக மக்களுக்கு ஒரு அறிவுரை சொல்கிறார். என்ன அது, அதோ உள்ளே பாருங்கள். விளக்கு அணையும் நிலை. அதற்கு எண்ணெய் ஊற்றச் செய்யுங்கள். இது தான் பாடலின் செய்தி. பாடல் என்ன?
“வில்லடிச்சான் கோயிலிலே! கோயிலிலே
விளக்கேத்த நேரமில்லே! நேரமில்லே
குடமடிச்சான் கோயிலிலே! கோயிலிலே
குத்துவிளக்கேத்த நாதியில்லே” என்று உருக்கமாக பாடியதும் சிலேடை நயத்தை மக்கள் புரிந்து உள்ளே ஓடிப் போய் விளக்கை சரி செய்து ஒளியை பெருக்குகிறார்கள். அவர் கலையை ஆதரியுங்கள். அதை ரசிப்பதில் மயங்கி கடவுளுக்கு விளக்கேற்ற மறந்து விடாதீர்கள் என அறிவுரையை எவ்வளவு நாசூக்காக சொல்லியுள்ளார். இதுதான் வில்லிசையின் சிறப்பு.
எளிதாக, இனிதாக, கதையாக, வசனமாக, நகைச்சுவையாக நல்லிசையோடு இதில் சமுதாய நன்மைகளைச் சொல்லலாம் என்பதை உணர்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டு இருந்தபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முன்பு சுதந்திர போராட்டம் பற்றியும், மகாத்மா காந்தி பற்றியும் வில்லிசை பாட்டு பாடினேன். சுதந்திரத்துக்கு முன்பு காந்திக்கு ‘ஜே’ என்று கூறினால், போலீசார் தடியை ஏந்தி அடிக்க வருவார்கள்.
இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி இரவு காந்திக்கு ‘ஜே’ என்று கூறியவுடன், போலீஸ்காரன் தடியை ஓங்குவான். நள்ளிரவில் நாடு சுதந்திரம் அடைந்த செய்தி வெளியானது. உடனே ஒரு போலீஸ்காரன் ஓங்கிய தடியை கீழே இறக்காமல், தடியின் மேலே காந்தி கொடியை கட்டினான். இதை நான் வில்லுப் பாட்டாக, இசையுடன், “காந்தி பெயரை சொன்னவுடன் கம்பெடுத்து வந்தவங்க கண்முன்னாளே அதே கம்பில் காந்தி கொடி கட்டினாங்க” என்று பாடினேன்.
இதைக் கேட்டதும் கலைவாணர் கை தட்டி சிரித்து, ஆகா அபார கற்பனை என்று பாராட்டினார். பின்னர் அவர் எதிர்பாராதவிதமாக என் வீட்டுக்கு காரில் வந்தார். அவரை பார்த்ததும் கூட்டம் திரண்டது. அதை விலகிக் கொண்டே என் வீட்டுக்கு வந்த அவர் என்னிடம், ‘ஏய்... பாட்டு ஜோர்’ என்று கூறி தட்டிக்கொடுத்தார்.
என் அம்மாவிடம் ‘தங்கமான புள்ளைய பெத்து இருக்கீங்க. என்னை சிரிப்பாணி காட்ட வச்சுப்புட்டான்’ என்று கூறி இவனை நான் மெட்ராசுக்கு கூட்டிட்டு போறேன் என்று கூறினார்.
என் அன்னையிடம் அனுமதி பெற்றுக்கொண்டு என்னை சென்னைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். மாம்பலம் என்.எஸ்.கே. நாடக சபாவில் தங்கி இருந்தேன். அங்கு ‘காந்தி மகான்’ கதையை வில்லுப்பாட்டாக எழுத சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். பாட்டு எழுதி முடித்ததும் எம்.எஸ்.சுப்புலட்சுமி வீட்டில் அரங்கேற்றம் நடந்தது. அப்போதைய முதல்-அமைச்சர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார், கல்கி, சி.பா.ஆதித்தனார், என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட 40 பேர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார், புத்தர் உள்பட 150 தலைவர்களின் வரலாற்றை வில்லுப்பாட்டாக பாடினேன். அரசு திட்டங்களான ஐந்தாண்டு திட்டம், சத்துணவு திட்டம், சமூக பிரச்சினை பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளில் மகள் பாரதி, மகன் காந்தியுடன் சென்று நடத்தியுள்ளேன்.
எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது, காந்தியின் வில்லுப்பாட்டு கதையை கேட்க விரும்புவதாக தெரிவித்தனர். அதன்படியே கலைவாணர் அரங்கில் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர். வருவதாக இருந்தது. 9.45 மணி ஆகியும் அவர் வரவில்லை. இனிமேல் வரமாட்டார். வேறு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். நீங்கள் கதையை தொடங்குங்கள் என்று கூறினர்.
நானும் காந்தியின் கதையை பாடத் தொடங்கினேன். காந்தி அரிச்சந்திரன் நாடகத்தை பார்த்த நிகழ்வை நான் கதையாக சொல்லிக்கொண்டு இருந்தேன். அப்போது திடீரென அரங்கத்தில் பரபரப்பு. வாழ்க, வாழ்க என்று வாழ்த்தொலியாலும், கைத்தட்டலாலும் அரங்கமே அதிர்ந்தது. கூட்டத்தின் மத்தியில் எம்.ஜி.ஆர். புன்னகைத்தபடி நடந்து வந்துகொண்டு இருந்தார்.
நான் பாடுவதை நிறுத்தி விட்டு அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். அவரும் வணக்கம் சொல்லி அமர்ந்தார். காந்தி கதையை எதில் இருந்து பாடுவது என்று குழப்பம் ஏற்பட்டது. ஒரு நிமிடம் யோசித்து சமயோசிதமாக, ‘இதுவரை ஒத்திகை பார்த்தோம். இனி நிகழ்ச்சியை தொடங்குவோம்’ என்று கூறினேன். இதைக் கேட்ட எம்.ஜி.ஆர். சிரித்தபடி கைகளை உயர்த்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். முன்னிலையில் காந்தி மகான் கதையை வில்லிசையில் பாடிக்கொண்டே வந்த நான், மகாத்மா காந்தி மீண்டும் வந்து பிறக்க வேண்டும் என்று பாடினேன். சிறிது இடைவெளிவிட்டு, ‘இங்கிருந்து போனால் தானே பிறப்பதற்கு? காந்தி இங்கே தான் இருக்கிறார்’ என்று பீடிகையுடன் கூறினேன். கூட்டத்தினர் புரியாமல் திகைக்க, நான் எம்.ஜி.ஆரை திரும்பி பார்த்தேன். அவ்வளவுதான் மக்களின் கரகோஷம் அடங்க வெகுநேரமானது.
நான், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளேன். முக்கியமாக நிகழ்ச்சிகளுக்கு என் பிள்ளைகளோடும், மருமகன் திருமகனுடனும் செல்கிறேன். கமல்ஹாசன் எங்களை திரைப்படம் மூலம் மக்களிடம் செல்லும்படி பெருமை படச்செய்தார்.
தமிழ்க்கலை மட்டுமல்ல; தன்மானக் கலையே வில்லிசை. இன்னும் வளர வேண்டும். தமிழ்க் கலையின் இயல்பான கலாசாரம் மறைந்துவிட்டது. தமிழ்மொழி பரவுவது போல் தமிழ் பண்பாடு பரவ வேண்டும். வில்லிசைக் கலையை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும். வெளிநாட்டு கலாசாரம் நமது கலாசாரத்தை கெடுக்கிறது. இன்று வில்லிசை பாடல்கள் எழுதுகிற நல்ல கலைஞர்கள் கிடைக்கவில்லை. தமிழ்போல எல்லோரும் வாழ வேண்டும். இந்த தத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று (ஜூலை 12-ந்தேதி) சுப்பு ஆறுமுகத்தின் பிறந்த நாள்.
Related Tags :
Next Story