உருவாகிவரும் புதிய கிரகம்!


உருவாகிவரும் புதிய கிரகம்!
x
தினத்தந்தி 14 July 2018 3:15 AM IST (Updated: 12 July 2018 2:52 PM IST)
t-max-icont-min-icon

தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியல் ஆய்வாளர்கள் படம் எடுத்தனர்.

ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வாயு மற்றும் தூசுகளால் உருவாகிவரும் புதிய கிரகத்தை வானியல் ஆய்வாளர்கள் படமெடுத்துள்ளனர்.

இதுபோன்ற உருவாகும் நிலையில் உள்ள கிரகத்தை ஆராய்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாகத் தேடிவரும் நிலையில், முதல்முறையாக இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘பிடிஎஸ் 70’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் குள்ள நட்சத்திரத்துக்கு ஒரு கோடிக்கும் குறைவான வயது இருக்கும் என்றும், இதன் துணைக்கோளின் வயது 50 முதல் 60 லட்சம் ஆண்டுகள் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

இந்தக் கிரகம், வியாழனைவிட பல மடங்கு பெரியதாக இருக்கும் எனவும், மேலும் அது மேகமூட்டமாக வளிமண்டலத்தைக் கொண்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

யுரேனஸ் சூரியனைச் சுற்றிவரும் தூரத்தைப் போன்று இந்தக் கோளும் அதன் நட்சத்திரத்தைச் சுற்றிவரும் என்று ஜெர்மனியில் உள்ள ‘மாக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிட்யூட் பார் அஸ்ட்ரானமி’யின் ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.

நமது சூரியக் குடும்பத்தில் உள்ள எல்லாக் கோள்களையும்விட அதிகமாக, அதாவது இதன் மேற்பரப்பு வெப்பநிலை ஆயிரம் டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கருதப்படுகிறது.

கொரோனாகிராப் என்ற கருவியைப் பயன்படுத்தி மங்கலாக காணப்படும் இந்த கிரகத்தின் ஒளி தடுக்கப்பட்டதன் மூலமே இதன் இருப்பிடம் கண்டறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நட்சத்திரம் உருவாகும்போது எஞ்சியிருக்கும் பொருட்களே கிரகங்களாக உருவாகின்றன என்ற கோட்பாடு அனைவராலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

பெரும்பாலும் வாயு மற்றும் தூசுகளை கொண்டிருக்கும் இது, உருவான புதிய நட்சத்திரத்தை பரந்த வட்டப்பாதையில் சுற்றி வரும். காலப்போக்கில், அந்தச் சிதைவுகளின் சிறுபகுதிகள் ஒன்றிணைந்து ஒட்டிக்கொள்ளும். 

Next Story