2 லட்சம் தங்க நாணயங்களைப் பதுக்கிய நபர் கைது!
ஈரான் நாட்டில், சுமார் இரண்டாயிரம் கிலோ தங்க நாணயங்களைப் பதுக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
உள்ளூர் சந்தையை தன்னுடைய ஆதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்வதற்காக அவர் தங்க நாணயங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக ஈரான் போலீசார் தெரிவித்தனர்.
பெயர் வெளியிடப்படாத 58 வயதான அவர், தன்னுடைய கூட்டாளிகளைப் பயன்படுத்தி கடந்த 10 மாதங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் தங்க நாணயங்களுக்கு மேலாகச் சேர்த்து பதுக்கி வைத்திருந்ததாக டெக்ரான் போலீஸ் தலைவர் ஜெனரல் ஹுசைன் ரஹிமி தெரிவித்தார்.
‘தங்க நாணய சுல்தான்’ என்றே அந்த மனிதர் தன்னைக் குறிப்பிட்டு வந்திருக்கிறார்.
கடந்த மே மாதம் ஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியபின்னர், ஈரான் நாட்டவர்கள் தங்க நாணயங்களை வாங்கி வருகிறார்கள்.
ஈரான் மீது மீண்டும் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா கூறியுள்ளதால், ஈரானின் நாணய மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்போது ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் நாணய மதிப்பு 43 ஆயிரம் ரியால் ஆக உள்ளது.
ஆனால் சமீபத்தில், அதிகாரப்பூர்வமற்ற அன்னியச் செலாவணி பரிமாற்றச் சந்தையில் ஓர் அமெரிக்க டாலரின் மதிப்பு 81 ஆயிரம் ரியாலாக இருந்தது.
ரியால் மதிப்பு வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக, 2 வாரங்களுக்கு முன்னால் டெக்ரான் கிராண்ட் பஜாரைச் சேர்ந்த வணிகர்கள் தங்களின் கடைகளை மூடிவிட்டு, தலைநகரில் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டனர்.
ஈரான் நாட்டு பொருளாதார பிரச்சினைகளால் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் மாகாணப் பெருநகரங்களிலும், நகரங்களிலும் அரசுக்கு எதிராக இது போன்ற போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story