மாவட்ட செய்திகள்

அதிகமாக, குறைவாக ‘புகைக்கும்’ நாடுகள்! + "||" + Smoking countries

அதிகமாக, குறைவாக ‘புகைக்கும்’ நாடுகள்!

அதிகமாக, குறைவாக ‘புகைக்கும்’ நாடுகள்!
உலக அளவில் புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
‘புகை நமது ஆரோக்கியத்துக்குப் பகை’ என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், உலக அளவில் புகை பிடிப்போர் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டில் மட்டும் கடந்த 2016- 2017 ஆண்டு காலகட்டத்தில் புகை பிடிப்போர் எண்ணிக்கை 10 லட்சமாகக் குறைந்தது. மற்ற நாடுகளில், புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.

அப்படி, உலகில் புகைப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளின் விவரங்கள்...

கிரிபாட்டி: தீவு நாடான கிரிபாட்டியில் புகைபிடிக்கும் விகிதம் அதிகமாக உள்ளது. ஆண்களில் மூன்றில் இரண்டு பங்கினரும், பெண்களில் மூன்று பேரில் ஒருவரும் அங்கு புகை பிடிக்கின்றனர். இந்த பசிபிக் தீவின் மொத்த மக்கள்தொகை ஒரு லட்சத்து மூன்றாயிரம்தான். வலுவற்ற புகைப்பழக்க கட்டுப்பாட்டுச் சட்டங்களும், புகையிலைப் பொருட்கள் மீதான குறைந்த வரியும் புகைப்போர் விகிதம் அதிகமாக இருக்கக் காரணம்.

மான்டினீக்ரோ: கிழக்கு ஐரோப்பிய நாடான மான்டினீக்ரோ, 46 சதவீதத்துடன் ஐரோப்பாவிலேயே அதிக புகை பிடிக்கும் விகிதத்தைக் கொண்டுள்ளது. ஆறு லட்சத்து 33 ஆயிரம் மக்கள்தொகை உடைய, பால்கன் மலையை ஒட்டியுள்ள இந்த நாட்டில், சட்டப்பூர்வ வயதுடைய ஒருவர் ஆண்டுக்கு சுமார் 4 ஆயிரம் சிகரெட்டுகளை புகைக்கிறார். இந்நாட்டில் பொது இடங்களில் புகைப்பது தடை செய்யப்பட்டிருந்தாலும், அலுவலகங்கள், விடுதிகள், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் ஆகிய இடங்களில் புகைப்பது அதிகமாக உள்ளது.

கிரீஸ்: உலகிலேயே மூன்றாவது அதிக புகை பிடிக்கும் விகிதம் உள்ள கிரீஸ் நாட்டில், பாதிக்கும் அதிகமான ஆண்களும், 35 சதவீத பெண்களும் புகை பிடிக்கின்றனர். இங்கு 2008 முதல் பொது இடங்களில் புகைக்கத் தடை உள்ளபோதிலும் அதை யாரும் அதிகமாகப் பின்பற்றுவதில்லை. சட்டவிரோத சிகரெட் கடத்தல் இங்கு பரவலாக உள்ளது. அதனால் அரசுக்கு 2019-ல் ஒரு பில்லியன் யூரோ வரி வருவாய் இழப்பு உண்டாகும் என்று யூரோ மானிட்டர் இன்டர்நேஷனல் சந்தை ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

கிழக்கு தைமூர்: கிழக்கு தைமூரில் வாழும் ஆண்களில் 80 சதவீதம் பேருக்கு புகைப் பழக்கம் உள்ளது. இங்கு பெண்களில் 6 சதவீதம் பேர் மட்டுமே புகைக்கின்றனர். இந்த ஏழை நாட்டின் கலாச்சாரத்தில் புகையிலை ஓர் அங்கம். ஒரு பாக்கெட் சிகரெட்டின் விலை ஒரு டாலருக்கும் குறைவாகவே உள்ளது. இந்நாட்டில் புகையிலை குறித்த எச்சரிக்கை விளம்பரங்களும் அதிகமாகப் பயன் அளிப்பதில்லை. காரணம் இங்கு பாதிப் பேருக்கு படிக்கத் தெரியாது.

ரஷியா: ரஷியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட 60 சதவீத ஆண்களும், 23 சதவீத பெண்களும் புகைப்பழக்கம் உள்ளவர்களாக உள்ளனர். ரஷிய நாட்டில் பணியிடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் புகைக்கத் தடை உள்ளது. புகைப்பழக்கம் உலகில் பத்தில் ஒரு மரணத்துக்குக் காரணமாக உள்ளது. அவற்றில் கால்வாசி மரணங்கள் ரஷியாவில் நிகழ்கின்றன.

மேற்கண்ட நாடுகள் எல்லாம் அதிகம் புகைக்கும் நாடுகள் பட்டியலில் இடம்பெற்றிருந்தால், கானா, எத்தியோப்பியா, நைஜீரியா, எரித்ரியா மற்றும் பனாமா போன்ற நாடுகளில் புகைப்பழக்கம் குறைவாக உள்ளது.

உலகில் சராசரியாக 22 சதவீதம் பேர் புகைக்கிறார்கள் என்றால், ஆப்பிரிக்காவில் 14 சதவீதம் பேர்தான் புகைக்கின்றனர்.

ஆப்பிரிக்காவில் புகைப்பவர்களில் 70 முதல் 85 சதவீதம் பேர் ஆண்கள். பெண்களுக்கு குறைவான பொருளாதார சுதந்திரமே உள்ளதால் அவர்களிடையே புகைப் பழக்கமும் குறைவாக உள்ளது. பெண்கள் புகைப்பது அங்கு ஒழுக்கச் சீர்கேடாகப் பார்க்கப்படுவதும் ஒரு காரணம்.

கானா, எத்தியோப்பியா, நைஜீரியா ஆகிய நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலை கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துகின்றன.

‘காட்’ எனும் போதை உண்டாக்கும் இலையும் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் மெல்லப்படுகிறது. அதனால் அங்கு புகைப்பழக்கம் குறைவாக உள்ளது. உலக அளவில் 10 லட்சம் பேர் காட் இலைகளை பயன்படுத்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

சீனாதான் உலகிலேயே அதிக அளவில் புகையிலையைப் பயன்படுத்தும், புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கும் நாடு. அங்கு சுமார் 30 கோடிப் பேர் புகைக்கின்றனர். இது உலகில் புகைப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

கடந்த இருபது ஆண்டுகளில் முதல்முறையாக 2016-ல் சீனாவில் புகை பிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஆண்களைவிட பெண்கள் அதிகமாக புகை பிடிக்கும் ஒரே நாடு, டென்மார்க். அங்கு 19.3 சதவீத பெண்களும், 18.9 சதவீத ஆண்களும் புகை பிடிக்கின்றனர்.

ஆண்கள் மற்றும் பெண்களிடையே புகைபிடிக்கும் விகிதம் குறைவாக உள்ள ஐரோப்பிய நாடுகளில்தான் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

உலகம் முழுவதும் புகையிலையால் ஆண்டுதோறும் 70 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில், சுற்றியுள்ளவர்களின் புகைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அடக்கம். உயிரிழப்பவர்களில் 60 லட்சம் பேர் நேரடியான புகைப்பழக்கத்தால் இறப்பவர்கள்.

உலகில் புகைப் பழக்கம் உள்ள 110 கோடிப் பேரில் 80 சதவீதம் பேர் குறைவான மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் வாழ்வதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.