மாவட்ட செய்திகள்

‘மெய்நிகர் வங்கிகள்’ பற்றித் தெரியுமா? + "||" + Virtual banks

‘மெய்நிகர் வங்கிகள்’ பற்றித் தெரியுமா?

‘மெய்நிகர் வங்கிகள்’ பற்றித் தெரியுமா?
மெய்நிகர் வங்கிகள் தற்போது இந்தியாவிலும் முளைவிடத் தொடங்கியிருக்கின்றன.
இணைய வசதியானது எல்லாத் துறைகளையும் போல வங்கியியலையும் புரட்டிப் போட்டுவிட்டது. இருந்த இடத்தில் இருந்தே பல வங்கிச் சேவைகளைப் பெற முடிகிறது.

இதைப் பயன்படுத்தி, நம் இருப்பிடத்திலேயே வங்கிக் கணக்கை கண்காணிப்பது, கட்டணங்களைச் செலுத்துவது, பணப் பரிமாற்றம் எனப் பலவற்றையும் மேற்கொள்ள இயலுகிறது. நமது நிதிக் கட்டமைப்பை நன்கு பராமரிக்க முடிகிறது.

இணையவழி வங்கிச் சேவைகள், நுகர்வோர் வங்கிகளுக்குக் கூடுதல் வசதியாக இருப்பது மட்டுமல்லாமல், வங்கிகளுக்கு மாற்றாகவும் இருக்கின்றன.

நம்மில் பலரும் இணையவழி வங்கிச் சேவையைப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் முழுக்க முழுக்க இணையத்தின் வாயிலாக மட்டும் செயல்படும் இணைய வங்கிகள் (Internet Banks) அல்லது மெய்நிகர் வங்கிகள் (Virtual Banks) பற்றித் தெரியுமா?

மெய்நிகர் வங்கிகள் தற்போது இந்தியாவிலும் முளைவிடத் தொடங்கியிருக்கின்றன, வருங்காலத்தில் நாமும் இவ்வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஆகக்கூடும் என்பதால், இவற்றைப் பற்றி அறிந்துகொள்வோம்...

மெய்நிகர் வங்கிகள்

பாரம்பரியமாகக் கட்டிடங்களில் இயங்கிவந்த வங்கிகள், 1990களின் தொடக்கத்தில், தங்கள் செயல்பாட்டு செலவுகளைக் குறைக்க, குறிப்பிட்ட வங்கிச் சேவைகளை இணைய வழியில் வழங்க முயற்சி எடுத்தன. அதில் அடைந்த வெற்றியின் காரணமாக, அனைத்து வங்கிகளும் மேம்படுத்தப்பட்ட, பல்வேறு வசதிகள் கொண்ட இணைய தளத்தைக் கட்டமைத்து, புது வங்கிக் கணக்குகளைத் திறத்தல், படிவங்களைப் பதி விறக்கம் செய்தல், கடன் விண்ணப்பங்களைப் பரிசீலித்தல் போன்ற பணிகளை அதன்மூலமே செய்தன.

இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாகத்தான், கிளை அலுவலகங்களே இல்லாமல், தமது அனைத்துவித வங்கிச் சேவைகளையும் இணையதளம் மூலமாகவே வழங்கும் ‘இணையவழி வங்கிகள்’ தொடங்கப்பட்டன. ‘மெய்நிகர்’ அல்லது ‘நேரிடை’ வங்கிகள் என அழைக்கப்பட்ட இவ்வங்கிகளில், பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இல்லாததால், அந்தப் பணத்தை வைப்புநிதிக்கு அதிக வட்டிவிகிதம், கடனுக்குக் குறைந்த வட்டி, சேவைக் கட்டணங்கள் குறைவு எனச் சலுகைகளாக இவ்வங்கிகள் தருகின்றன.

முதல்முறையாக முழுமையான பயன்பாட்டுக்கு வந்த நேரிடை வங்கி, அமெரிக்காவில் தொடங்கப்பட்ட ‘செக்யூரிட்டி பர்ஸ்ட் நெட்வொர்க் பேங்க்’ ஆகும்.

அட்லாண்டாவை தலைமையிடமாகக் கொண்டு, 1995 அக்டோபர் 18-ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வங்கி, தொடக்கத்தில் அதிக லாபம் ஈட்டாவிட்டாலும், மூன்றாண்டுகளுக்குப் பின் மெய்நிகர் வங்கி என்ற கருத்தை நிலைநிறுத்தியது.

எங்கே, எப்படி, என்னென்ன வசதிகள்?

இணையவசதி உள்ள எந்த ஓர் இடத்திலிருந்தும் நேரிடை வங்கிகளைப் பயன்படுத்தலாம். தொழில்நுட்பரீதியான பராமரிப்புக் காலங்களைத் தவிர, 365 நாட்களும் 24 மணிநேரமும் வங்கிச் சேவைகளைப் பெறலாம். இணையவசதி இல்லையென்றாலும் கூட வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் சேவைகளைப் பெறலாம். பண இருப்பு விவரங்கள் மற்றும் இதர தரவுகளைச் சில பொத்தான்களை அழுத்துவதன் மூலம் எளிதாகப் பெறலாம். இதன் மூலம் வேகமான, எளிதான, பயனுள்ள வங்கிச் சேவையை வாடிக்கையாளர் பெற முடியும்.

நேரிடை வங்கிக் கணக்குகளைப் பராமரிப்பது மிகவும் எளிதானது. மின்னஞ்சல் முகவரியை மாற்றுவது, நடப்பு வட்டிவிகிதத்தை அறிவது, விவரங்களைச் சரிபார்ப்பது போன்றவற்றைச் சில நிமிடங்களில் செய்யலாம்.

வங்கிக் கட்டமைப்புகள், பணியாளர்கள் மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இல்லாததால், நேரிடை வங்கிகள் அந்தப் பணத்தை வைப்புநிதிக்கு அதிக வட்டிவிகிதம், கடனுக்குக் குறைந்த வட்டி, சேவைக் கட்டணங்கள் குறைவு எனச் சலுகைகளாகத் தருகின்றன. மேலும் இவை, அதிக லாபம் தரும் வங்கிக் கணக்குகள், முதலீட்டுப் பத்திரங்கள், முன்கூட்டியே எடுக்கப்படும் பத்திரங்களுக்கு அபராதம் இல்லை எனச் சலுகைகளை வழங்குகின்றன.

சில வகை வங்கிக் கணக்குகளை, குறைந்தபட்ச இருப்பு, வைப்புநிதி, சேவைக் கட்டணங்கள் இல்லாமல்கூடத் திறக்க முடியும்.

பாரம்பரிய வங்கிகளைக் காட்டிலும் நேரிடை வங்கிகள், விரிவான வசதிகளைக் கொண்ட நல்ல பலமான இணையதளத்தை வைத்துள்ளன. அதன் மூலம் நிதிநிலை திட்டமிடல், நிதிக் கணிப்பு கள், முதலீட்டு ஆய்வுகள், கடன் கணிப்பான்கள் மற்றும் பங்குவர்த்தகத் தளம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கட்டணங்களைச் செலுத்துதல், வரிப் படிவங்கள் நிரப்புதல், வரிதாக்கல் வசதிகளும் உள்ளன.

நேரிடை வங்கிகள் தற்போது கைபேசியில் வங்கிச் சேவை களைப் பெறும் வசதியையும் கொண்டுள்ளன. ஸ்மார்ட்போன்களில் உள்ள செயலிகளின் மூலம் இன்னும் எளிதாக நேரிடை வங்கி களைப் பயன்படுத்தலாம்.

பாரம்பரிய வங்கிக் கணக்குகளில் இருந்து, தானியங்கி மின்னணுப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த அளவில்லா பரிமாற்றங்களுக்கு நேரிடை வங்கிகள் கட்டணம் வசூலிப்பதில்லை. வேறு வங்கி பரிமாற்றங்களுக்கும் கட்டணம் இல்லை. மேலும், தானியங்கி கட்டணம் கட்டுதல், நேரிடை வைப்புநிதி போன்ற வசதிகளும் உள்ளன.

பாரம்பரிய வங்கிக் கணக்குகளைக் காட்டிலும், அதிகத் தகவல்களைத் தராமல் இந்த நேரிடை கணக்குகளைத் திறக்க முடியும். இணையத்திலேயே தகவல்களை உள்ளீடு செய்ய, படிவங்களைப் பதிவிறக்க, மின்னஞ்சல் அனுப்ப வசதிகள் உள்ளன. ஏதாவது பிரச்சினை என்றால், உடனே வங்கியை தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக அணுகலாம். மேலும் ஒரு வசதியாக, ஏற்கனவே நாம் பணம் அனுப்பியவர்களின் தகவல்கள் சேமிக்கப்படுவதால், அதை மீண்டும் உள்ளீடு செய்யாமல் பயன்படுத்தலாம்.

நேரிடை வங்கிகள் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக உள்ளன. மின்னணுப் பரிவர்த்தனைகளுக்குக் காகிதங்கள் தேவையில்லை. வாகனப் போக்குவரத்தைக் குறைத்து மாசு கட்டுப்படுத்தப்படுகிறது. அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் தேவை குறைகிறது.

குறைகள், பிரச்சினைகள்

சரி, நேரிடை வங்கிகளின் குறைபாடுகள் என்ன?

இணையவழி நேரிடை வங்கிகளிலும் சில குறைபாடுகளும், சிரமங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அதாவது, பாரம்பரிய வங்கிச் சேவைகளின் மூலம், வங்கி களுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவை வளர்த்துக்கொள்ள முடியும். வங்கிக் கிளையில் உள்ள ஊழியர்களுடன் பரிச்சயமானால், கடன் மற்றும் சிறப்புச் சேவைகளில் முன்னுரிமை பெறலாம். மேலாளருடன் நல்லுறவு பேணினால், அவர் மூலம் உங்கள் வங்கிக் கணக்குகளில் சில சலுகைகளைப் பெறலாம். சேவைக் கட்டணம் போன்ற பிரச்சினைகளை எளிதில் தீர்க்கலாம். வங்கி ஊழியர்கள், உங்களின் தனிப்பட்ட தேவைகளை எளிதில் தெரிந்துகொள்வார்கள். உங்களுக்கு அதிக மூலதனம் கொண்ட தொழில் கணக்கு துவங்க உதவிகள் கிடைக்கும். தொழிலுக்கான தேவைகள் மற்றும் திட்டமிடலுக்கு வங்கியின் உதவி எளிதில் கிட்டும்.

சிக்கலான பரிவர்த்தனைகள், முகவரி மாற்றம் போன்றவை நேரடியாகச் சந்தித்துத் தீர்க்கப்பட வேண்டியவை. பாரம்பரிய வங்கிகள் தமது ஊழியர்களைச் சந்திக்க வைத்து இதைச் சரிசெய்யும். ஆனால், நேரிடை வங்கிகளுக்கு இது மிகக் கடினம்.

நீங்கள் அடிக்கடி பணம் செலுத்துபவராக இருந்தால், சிறந்த, எளிதான முறையைக் கொண்ட பாரம்பரிய வங்கிகளே சிறந்தவை. மற்றொரு குறை, நேரிடை வங்கிகள் சொந்தமாக தானியங்கி பணப் பட்டுவாடா மையங்களை (ஏ.டி.எம்.) வைத்திருக்கவில்லை. வேறு வங்கிகளுடன் அவை உடன்பாடு வைக்கவில்லை என்றால், உங்கள் ஒவ்வொரு ஏ.டி.எம். பரிவர்த்தனைக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.

காப்பீடு, தரகு கணக்குகள் போன்ற பல நிதி சார்ந்த சேவைகளை நேரிடை வங்கிகள் வழங்குவது இல்லை. பாரம்பரிய வங்கிகள், தங்கள் சிறந்த வாடிக்கையாளர்களுக்கு, தேவையான வட்டி விகிதம் மற்றும் முதலீட்டு அறிவுரைகளை இலவசமாகத் தருகின்றன.

மேலும் வழக்கமான சேவைகளான, நோட்டரி வழங்குவது, வங்கி உத்தரவாதக் கடிதம் போன்றவை நேரிடை வங்கிகளில் தரப்படுவதில்லை. ஆனால், இவை பெரும்பாலான நிதி மற்றும் சட்டரீதியான பரிவர்த்தனைக்குத் தேவைப்படுபவை.

பாரம்பரிய வங்கிகளுக்கான அனைத்துச் சட்டங்களும், ஒழுங்குமுறைகளும் நேரிடை வங்கிகளுக்கும் பொருந்தும் என்பதால், அமெரிக்காவில் வங்கிக் கணக்குகள் எப்.டி.ஐ.சி. எனப்படும் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷனால் பாதுகாக்கப்படுகின்றன. அதிநவீன ‘என்கிரிப்ஷன்’ முறையில் கணக்குகள் பாதுகாக்கப்படுகின்றன. எனினும், எல்லாவற்றிலும் புகுந்து புறப்படும் கிரிமினல் கில்லாடிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

எனவே, அங்கீகரிக்கப்படாத ஊடுருவல்கள், தகவல் திருட்டுக்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் நாம் எளிதில் கணக்குகளைக் கண்காணிக்கமுடியும் என்பதால், அவற்றைத் தடுக்க முடியும்.

பெரும்பாலான வங்கிகள், இணையத்தில் அனைத்துக் கண்காணிப்பு அமைப்பு களையும் வைத்துள்ளதால், இந்த ஊடுருவல்கள் எளிதில் கண்டறியப்பட்டு, உடனுக்குடன் விசாரிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர் நடவடிக்கைகளும்கூட கண்காணிக்கப்படுகின்றன.

ஆனால் மற்ற வங்கிகளைக் காட்டிலும், நேரிடை வங்கிகளுக்கு இணையவழிக் குற்றங்கள் சவாலாகவே இருக்கும். எனவே, நேரிடை வங்கிகளில் கணக்குத் துவங்கும்முன், அதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் கொள்கைகளைத் தெரிந்துகொள்வது அவசியமானது.