தலைநகரைக் காக்க உழைக்கும் இளம் ‘பசுமைப் படைகள்'!


தலைநகரைக் காக்க உழைக்கும் இளம் ‘பசுமைப் படைகள்!
x
தினத்தந்தி 14 July 2018 3:15 AM IST (Updated: 12 July 2018 3:50 PM IST)
t-max-icont-min-icon

சுற்றுச் சூழலைக் காக்க போராடத்தான் வேண்டும். காரணம், வேறு வழியில்லை’’

நம் நாட்டின் தலைநகரான டெல்லியின் சுற்றுச்சூழல் நிலை, பெருமைப்படத்தக்கதாக இல்லை.

இதுகுறித்த வருத்தம் நமக்கு இருப்பதைப் போல, டெல்லிவாழ் ஓர் இளைஞர் கூட்டத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அதன் விளைவாக, அவர்கள் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி, டெல்லியின் சுற்றுச்சூழலை மேம்படுத்த உழைத்து வருகிறார்கள்- வருடத்தின் 365 நாட்களும்.

‘‘இது ஒரு சவாலான பணிதான். காரணம் முன்பு பலரும் இந்த முயற்சியில் சலிப்புற்றுப் பின்வாங்கிவிட்டார்கள்’’ என்கிறார், இந்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான விமலேந்து ஜா.

டெல்லியின் யமுனா நதியைச் சுத்தப்படுத்துவதற்காக மட்டும் இவர் பல்லாண்டு காலத்தைச் செலவிட்டிருக்கிறார். முடிவில்லாமல் தொடரும் இந்தப் பணியில் சில நேரங்களில் விரக்தி ஏற்படுவது இயல்புதான் என்று விமலேந்து ஜா ஒப்புக்கொள்கிறார்.

‘‘பாருங்கள், ஒருபுறம் நாங்கள் மரத்தை நட்டுக்கொண்டிருக்கையில், மறுபுறம், வளர்ச்சி என்ற பெயரில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. இது, சுற்றுச்சூழலைப் பேணுவதற்காக தங்கள் சக்தியை எல்லாம் வலிந்து செலவழிக்கும் இளைஞர்களை சோர்வடையத்தானே வைக்கும்? எங்களுடையது மிகவும் கடினமான பயணம் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதற்காக நாங்கள் எங்கள் பாதையில் இருந்து விலகப் போகிறோம் என்று அர்த்தமில்லை. சுற்றுச் சூழலைக் காக்க போராடத்தான் வேண்டும். காரணம், வேறு வழியில்லை’’ என்கிறார் தெளிவாக.

சுற்றுச்சூழலைக் காக்கும் போராட்டத்தில் திட்டமிட்டுச் செயல்பட்டால் தொய்வு ஏற்படாது என்பது, டெல்லி அருகே உள்ள குருகிராமைச் சேர்ந்த தீபக் ரமேஷ் கவுரின் கருத்து. ‘மர மனிதர்’ என்று அழைக்கப்படும் தீபக், ‘மரங்களைப் பரிசளிப்போம்’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியிருக்கிறார். ‘நூறு கோடி மரங்கள்’ என்ற தனது இலக்கை எட்டும் வரை இந்தப் பிரச்சாரம் தொடரும் என்கிறார் இவர்.

‘‘நாம் நமது வருங்காலத் தலைமுறையினருக்கு என்ன கொடுக்கப் போகிறோம்? தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முகமூடிகளையா? அதற்குப் பதில், இயற்கையான ஆக்சிஜன் சிலிண்டர்களான மரங்களை ஏன் வழங்கக் கூடாது? நான், குழந்தைகள், பெரியவர்கள், நிறுவனத்தினர் என அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி வருகிறேன். அவற்றை நட்டுப் பராமரிக்கும் விதத்தையும், மரம் வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறுகிறேன். அவ்வப்போது அந்த இடங்களுக்குச் சென்று நான் கொடுத்த மரக்கன்றுகளை எப்படி வளர்க்கிறார்கள் என்று பார்க்கிறேன். அவற்றின் பிறந்தநாளையும் கொண்டாடச் செய்கிறேன். இதன் மூலம், மரங்களைக் காக்கும் ஒரு பொறுப்புணர்வை மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஏற்படுத்துகிறேன்’’ என்கிறார்.

‘கீப் இந்தியா பியூட்டிபுல்’ என்ற இளம் தன்னார்வத் தொண்டு நிறுவனமும் தலைநகர் உள்ளிட்ட பகுதிகளை அழகாகவும், சுத்தமாகவும் பராமரித்திட உழைத்து வருகிறது.

இந்த அமைப்பின் இளையோர் பட்டாளம், பொது இடங்களில் கூடி சுத்தம், சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த நாடகங்களை நடத்துகிறது, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்கிறது. பின்னர், மக்கக்கூடிய பொருளால் தயாரிக்கப்பட்ட கோணிப்பைகளில் குப்பைகளை சேகரிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

‘‘உடற்தகுதியோடு உள்ளவர்களால்தான் பொது விஷயங்களுக்காக உழைக்க முடியும். அதனால்தான் நாங்கள் பொது இடங்களில் உடற்பயிற்சியும் செய்கிறோம். சமூக நலனுக்காக நாங்கள் உழைப்பது மட்டுமின்றி, பொதுமக்களும் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த அடிப்படையில்தான் விழிப்புணர்வுப் பிரச்சார நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்கிறோம்’’ என்று இந்த அமைப்பின் இயக்குநரான விஷால் சேத்தி கூறுகிறார்.

இந்த இளைஞர்களின் முயற்சியை மூத்தவர்கள் நெகிழ்ந்து வாழ்த்துகிறார்கள் என்றால், பிற இளைஞர், இளைஞிகளும் இவர்களோடு சேர்ந்து செயல்பட ஆர்வத்தோடு முன்வருகிறார்களாம்.

ஊர்தோறும் இது போன்ற பசுமைப் படைகள் உருவாக வேண்டும்! 

Next Story