பாவூர்சத்திரம் அருகே திருமணம் ஆன 2 மாதங்களில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு சாவு உதவி கலெக்டர் விசாரணை


பாவூர்சத்திரம் அருகே திருமணம் ஆன 2 மாதங்களில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு சாவு உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 13 July 2018 2:30 AM IST (Updated: 12 July 2018 6:01 PM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் அருகே திருமணம் ஆன 2 மாதங்களில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு இறந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பாவூர்சத்திரம், 

பாவூர்சத்திரம் அருகே திருமணம் ஆன 2 மாதங்களில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு இறந்தார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பட்டதாரி பெண் 

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரை அடுத்த மாடியனூரை சேர்ந்தவர் பொன்சிங் (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், திப்பணம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகள் விமலாதேவி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. விமலாதேவி எம்.காம். பட்டதாரி ஆவார். திருமணம் முடிந்த கையோடு கணவன், மனைவி 2 பேரும் சென்னைக்கு சென்று விட்டனர். பின்னர் அவர்கள் அங்கு வசித்து வந்தனர்.

தூக்குப்போட்டு சாவு 

இந்த நிலையில் விமலாதேவிக்கு தலைப்பகுதியில் ஏதோ நோய் தாக்கியதாக தெரிகிறது. உடனே பொன்சிங் சிகிச்சைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு விமலாதேவியை மாடியனூரில் உள்ள தனது தாய் வீட்டில் விட்டுவிட்டு அவர் மட்டும் சென்னைக்கு சென்றுவிட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த விமலாதேவி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமலாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி கலெக்டர் விசாரணை 

இறந்த விமலாதேவிக்கு திருமணம் முடிந்து 2 மாதங்களே ஆவதால் இதுகுறித்து தென்காசி உதவி கலெக்டர் சவுந்தர்ராஜ் மேல் விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் ஆன 2 மாதங்களில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது. 


Next Story