கோவில்பட்டி அருகே ரெயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு


கோவில்பட்டி அருகே ரெயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 12 July 2018 9:00 PM GMT (Updated: 12 July 2018 1:33 PM GMT)

கோவில்பட்டி அருகே ரெயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டி அருகே ரெயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண்ணிடம் நகை பறிப்பு 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலை பகுதியைச் சேர்ந்தவர் திபுகுமார் (வயது 50). இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சுதர்சனா (45). திபுகுமார் மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தன்னுடைய மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் இரவில் திருவனந்தபுரத்தில் இருந்து புனலூர்–மதுரை பாசஞ்சர் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் கோவில்பட்டி அருகே குமாரபுரம் ரெயில் நிலையத்தில் கோவை–நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து செல்வதற்காக, புனலூர்–மதுரை பாசஞ்சர் ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அந்த ரெயிலில் ஜன்னல் ஓரத்தில் படுத்து தூங்கி கொண்டிருந்த சுதர்சனா கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலிச்சங்கிலியை மர்மநபர் பறித்து விட்டு தப்பி ஓடினார்.

மர்மநபருக்கு வலைவீச்சு 

உடனே கண்விழித்த சுதர்சனா ‘திருடன்... திருடன்...‘ என்று கூச்சலிட்டார். இதையடுத்து திபுகுமார் மற்றும் பயணிகள் மர்மநபரை பிடிக்க முயன்றனர். ஆனாலும் அவர் இருளில் தப்பி ஓடி விட்டார். பின்னர் சிறிதுநேரத்தில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதுகுறித்து திபுகுமார் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெயிலில் பெண்ணிடம் நகை பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Next Story