ரசாயனம் கலந்த மீன்களை விற்பதாக தவறான தகவலை கூறிய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ரசாயனம் கலந்த மீன்களை விற்பதாக தவறான தகவலை கூறிய அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 July 2018 11:00 PM GMT (Updated: 12 July 2018 4:28 PM GMT)

ரசாயனம் கலந்த மீன்களை விற்பதாக தவறான தகவலை கூறிய மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து கும்பகோணத்தில் மீன்வியாபாரிகள் கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பெரியார் மீன் மார்க்கெட்டில் கடந்த 9–ந் தேதி மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு சில மீன்களில் பார்மலின் என்கிற ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலால் பொதுமக்கள் மீன்கள் வாங்க அச்சமடைந்தனர்.

இந்த நிலையில் மீன்களில் ரசாயனம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக தவறான தகவலை தெரிவித்த மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீன் வியாபாரிகள் நேற்று காலை கடைகளை அடைத்து மீன்மார்க்கெட் வாசல் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொருளாளர் நசீர், அவைத்தலைவர் ஜெயினுலாபுதீன், உறுப்பினர் ராஜா மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து கும்பகோணம் பெரியார் மீன் மார்க்கெட் தலைவர் ராஜ் கூறியதாவது:–

கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தவறான தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் எங்களுடய வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீன் வியாபாரத்தை நம்பி 1,000 தொழிலாளர்கள் உள்ளனர். கடந்த 2 நாட்களாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இங்கு ஆய்வு செய்த அதிகாரிகள் கும்பகோணம் மீன் மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதில்லை என தெரிவித்து பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும். பார்மலின் ரசாயனம் என்றால் என்ன என்று கூட எங்களுக்கு தெரியாது. எனவே தவறான தகவல் தெரிவித்து எங்களுடைய வியாபாரத்தை பாதிப்படைய செய்த மீன்வளத்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story