வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு
திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற
திருச்சி,
திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி காந்திமார்க்கெட் அருகே சப்– ஜெயில் ரோட்டில் இயங்கி வந்த வெங்காய மண்டி கடந்த ஜூன் மாதம் 3–ந்தேதி பழைய பால்பண்ணை திருச்சி– மதுரை சாலை அணுகுசாலை பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சப் –ஜெயில் ரோடு வெங்காய மண்டியில் பல ஆண்டுகாலமாக வேலை செய்து வந்த சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இதில் வேலை வழங்கப்படவில்லை. மாறாக புதிய வெங்காய மண்டி வியாபாரிகள் வெங்காய மூட்டைகளை ஏற்றி இறக்க தனியாக தொழிலாளர்களை நியமித்துக்கொண்டனர்.
இதனால் பழைய வெங்காய மண்டியில் வேலை இழந்த 277 தொழிலாளர்களும் புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு மட்டுமே வழங்கவேண்டும் என கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தினார்கள். மேலும் புதிய வெங்காய மண்டியில் வேலை செய்பவர்கள் சுமைப்பணி தொழிலாளர்களே அல்ல, அவர்களை வைத்து மூட்டைகளை இறக்க தடை விதிக்க வேண்டும் என கோரி முற்றுகை போராட்டமும் நடத்தினார்கள். இதுபற்றி கலெக்டர், போலீஸ் கமிஷனர் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் தீர்வு ஏற்படவில்லை.
இந்நிலையில் ஜூலை 12–ந்தேதி புதிய வெங்காய மண்டியில் தங்களுக்கு வேலை வழங்க கோரி குடும்பத்துடன் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக காந்திமார்க்கெட், வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த அறிவிப்பின்படி நேற்று காலை திருச்சி பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே சுமைப்பணி தொழிலாளர்கள் தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் திரண்டு நின்றனர். போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி ராமலிங்கம், குணசேகரன் (தொ.மு.ச), ராஜா, ராமர் (சி.ஐ.டி.யு), பிரபாகரன் (எல்.எல்.எப்) ஆகியோர் பேசினார்கள். அப்போது புதிய வெங்காய மண்டியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என கூறினார்கள்.
அதன் பின்னர் அங்கிருந்து அருகில் செயல்பட்டு வரும் புதிய வெங்காய மண்டியை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது அங்கு அரண் போல் நின்று கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பெண்கள் உள்ளிட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அடிக்காதே, அடிக்காதே சுமைப்பணி தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே, ஆண்டாண்டு காலமாக செய்து வந்த வேலையை பறிக்காதே, தவிக்கிறோம், தவிக்கிறோம் சோறு தண்ணி இல்லாம தவிக்கிறோம், காவல் துறையே வியாபாரிகளுக்கு ஆதரவாக மாறி எங்களை தடுக்காதே என கோஷங்கள் எழுப்பினார்கள்.
போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ளாத தொழிலாளர்கள் போலீஸ் தடுப்புக்காவலையும் தாண்டி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆக்ரோஷமாக கோஷமிட்ட தொழிலாளர்கள் சிலரை போலீசார் பிடித்து குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்ற முயன்றனர். அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதே போல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களும் பெண் போலீசாருடன் மல்லுக்கட்டினார்கள். இதில் 2 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்களது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
போலீசார் தொழிலாளர்களை பிடித்து வேனுக்கு தள்ளி செல்வதும் அவர்கள் போலீஸ் பிடியில் இருந்த நழுவி மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடுவதுமாக இருந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த போராட்டத்தினால் புதிய வெங்காய மண்டி அணுகு சாலையில் போக்குவரத்து தடைபட்டது. பழைய பால் பண்ணை ரவுண்டானாவில் இருந்தே போலீசார் மாற்று பாதை வழியாக வாகனங்களை திருப்பி விட்டனர்.
போராட்ட முடிவில் 70 பெண்கள் உள்பட 270 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். பெண் தொழிலாளர்கள் பாலக்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும், ஆண் தொழிலாளர்கள் பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்திலும் அடைத்து வைக்கப்பட்டனர்.
வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே ஒரு முறை புதிய வெங்காய மண்டிக்குள் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். இந்த சம்பவத்துக்கு பின்னர் போலீசார் புதிய வெங்காய மண்டிக்கு சுமைப்பணி தொழிலாளர்களை செல்ல விடாமல் பார்த்துக்கொண்டனர். நேற்றைய போராட்டம் புதிய வெங்காய மண்டி முன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் நடந்து விடாமல் இருக்க போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். போலீஸ் உதவி கமிஷனர்கள் பெரியண்ணன், அருள் அமரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், சிவசுப்பிரமணியன், வேல் முருகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். புதிய வெங்காய மண்டி வாசல் அருகில் ஒரு தடுப்பு வேலி, அதனை தாண்டி சிறிது தூரத்தில் ஒரு தடுப்பு வேலி, பழைய பால்பண்ணை ரவுண்டானா அருகே ஒரு தடுப்பு வேலி என மூன்றடுக்கு பாதுகாப்பினை போலீசார் ஏற்படுத்தி இருந்தனர். இந்த தடுப்புகளை தாண்டி யாரும் செல்ல முடியவில்லை.
வெங்காய மண்டி சுமைப்பணி தொழிலாளர்கள் நடத்திய மறியல் போராட்டம் நேற்று சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத்துடன் சாலை மறியல் போராட்டம் நடத்திய தொழிலாளர்களை அடக்குவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட போலீசார் குறிப்பாக சிறப்பு காவல் படை போலீசார் தலையில் தலைக்கவசம், முகத்திற்கு முக கவசம் அணிந்து கையில் கல்வீச்சு நடந்தால் அதனை எதிர்கொள்வதற்கு வசதியாக கேடயம் போன்ற தடுப்பான்கள் ஆகியவற்றை வைத்து இருந்தது தொழிலாளர்களை மிரள வைப்பதாக இருந்தது.
மறியல் போராட்டத்தில் கைக்குழந்தையுடன் பங்கேற்ற ஒரு தொழிலாளியை போலீசார் பிடித்து வேனில் ஏற்ற முயன்றனர். அவர் வேனில் ஏற மறுத்தால் போலீசார் அவரை குண்டு கட்டாக தூக்கி ஏற்றினார்கள். அப்போது போலீசாரின் இரும்பு பிடியில் சிக்கி அவரது தோளில் இருந்த இளந்தளிர் போன்ற பெண் குழந்தை அப்பா, அப்பா என மழலை குரலில் கதறியது. இந்த காட்சி அங்கே நின்று கொண்டிருந்த அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. போலீசாரின் செயலை கண்டித்து பலர் கோஷம் போட்டனர். அதன் பின்னரே போலீசார் அந்த தொழிலாளியை விடுவித்தனர்.
போலீசாருக்கும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த மோதலை வாலிபர் ஒருவர் சுற்றி வளைத்து படம் எடுத்துக்கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் நீங்கள் யார் என விசாரித்தனர். அதற்கு அவர் தான் ஒரு பத்திரிகை நிருபர் என கூறினார். ஆனால் அதற்கான அடையாள அட்டை எதுவும் அவரிடம் இல்லை. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நிருபர் இல்லை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசாருடன் அவர் மல்லுக் கட்டினார். ஒரு வழியாக அவரையும் பிடித்து போலீசார் வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.