6 பேருக்கு பசுமை வீடுகள் கட்டி தருவதற்கான ஆணை கலெக்டர் வழங்கினார்


6 பேருக்கு பசுமை வீடுகள் கட்டி தருவதற்கான ஆணை கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 12 July 2018 6:30 PM GMT (Updated: 12 July 2018 6:30 PM GMT)

சென்னை–சேலம் 8 வழி பசுமை சாலையால் வீடுகள் இழக்கும். 6 பேருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டி தருவதற்கான ஆணைகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்தில் சென்னை–சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்தில் நிலம் கையகப்படுத்த அளவிடும் பணி 59.100 கி.மீ. நீளத்திற்கு நடைபெறுகிறது. கடந்த 10 மற்றும் 11–ந் தேதிகளில் 23.3 கி.மீ. நீளத்திற்கு அளவீடு முடிந்து கல் நடும் பணி முடிவுற்றுள்ளது.

இதில் வளையல்கரணை கிராமத்தில் 7 பேரின் வீடுகளை கையகப்படுத்த வேண்டிய நிலை இருப்பதால் அவர்களில் ஏழ்மை நிலையில் உள்ள 6 பேருக்கு உடனடியாக வீட்டுமனைபட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டி தருவதற்கான ஆணைகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார். 
பின்னர் கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக 59.100 கி.மீ நிலம் கையகப்படுத்துவதற்கு அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களில் 23.3 கி.மீ. நீளத்திற்கு அளவீடு நடைபெற்று கல் நடும் பணி முடிவுற்றுள்ளது. அளவீட்டில் வளையல்கரணை கிராமத்தில் 7 வீடுகள் கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 

அதில் 6 வீடுகள் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் பட்டா இன்றி குடியிருந்து வருகின்றனர். தமிழக முதல்–அமைச்சரின் ஆணைக்கிணங்க, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது என்கிற நல்லெண்ண அடிப்படையில் 6 பேருக்கு அவர்கள் குடியிருக்கும் வளையல்கரணை கிராமத்திலேயே வீட்டுமனைபட்டா தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டுள்ளது. 

அவர்கள் குடியிருக்கும் வீட்டின் தன்மைக்கு ஏற்ப உத்தேசமாக ஒருவருக்கு ரூ.7 லட்சமும், 3 நபர்களுக்கு தலா ரூ.4 லட்சத்து 30 ஆயிரமும், 2 பேருக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரமும் இழப்பீட்டுத் தொகையாக இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையால் வழங்கப்படும்.

மற்றொரு வீட்டின் உரிமையாளருக்கு அவரது வீட்டிற்கு ஏற்ப இழப்பீட்டு தொகை வழங்கப்படும். காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 மீட்டருக்கான சாலை அமைக்கும் உத்தேச அளவீட்டின்படி 82 வீடுகள் கையகப்படுத்த வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.

சரியான அளவீட்டின்படி சாலையின் அகலம் 70 மீட்டராக குறைக்கப்படுவதால் கையகப்படுத்தப்படும் வீடுகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது. பாதிப்புக்குள்ளான பொதுமக்களிடையே வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கிற வதந்தியையும், அச்ச உணர்வையும் போக்கும் வகையில் தற்போது 6 பேருக்கு உடனடியாக வீட்டுமனைபட்டா மற்றும் வீடு கட்டுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்று விவசாய நிலங்களை பொறுத்தவரையில் நன்செய் 278.77 ஹெக்டேரும், புன்செய் 184.63 ஹெக்டரும், அரசு நிலம் 110.34 ஹெக்டேரும் கையகப்படுத்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாலை அகலம் 70 மீட்டராக கணக்கிடும்போது இது மேலும் குறையும்.

மேலும் சாலை அமைக்கும் போது, சாலையின் குறுக்கே தேவையான இடங்களில் இடுபொருட்கள் மற்றும் விளைபொருட்களை எடுத்து செல்ல விவசாயிகளுக்கு தேவையான போக்குவரத்திற்கான வழி மற்றும் தண்ணீர் செல்வதற்காக சாலைக்கு அடியில் சிறுபாலங்கள் அமைத்து தரப்படும்.

நீர்நிலைகளில் ஏரிகளின் குறுக்கே சாலை அமையும் போது நீர்வழிப்பாதை அடைபடாமல் சிமெண்டு கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு சாலை அமைக்கப்படும். எனவே, வெள்ளப்பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என தெரிவித்தார். 

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) நர்மதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், காஞ்சீபுரம் வருவாய் கோட்ட அதிகாரி ராஜூ, தாசில்தார் ரமேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story