ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 July 2018 4:15 AM IST (Updated: 13 July 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆலத்தூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பாடாலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அடுத்து திருவளக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. திருவளக்குறிச்சி கிராமத்தின் அருகே வீடு உள்ள பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கல் குவாரி ஏலம் விடப்பட்டு கல் உடைக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிதாக கிரஷர் தொடங்கப்பட உள்ளது. இதனையறிந்த திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கிரஷர் தொடங்க உள்ள பகுதிக்கு சென்று முற்றுகையிட்டனர். அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அவர்களுக்கு சரிவர பதில் அளிக்க வில்லை. இதையடுத்து அவர்கள் ஆலத்தூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையறிந்த தாசில்தார் ஷாஜகான், செட்டிகுளம் வருவாய் ஆய்வாளர் பழனியப்பன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பொதுமக்கள் கூறியதாவது:- கல் குவாரியில் அதிகளவு பள்ளம் வெட்டி கல் எடுப்பதால் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. விவசாயத்திற்கும் தண்ணீர் நீர்மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏலம் விடப்பட்ட பட்டா குவாரியில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கல் வெட்டி எடுத்து செல்கின்றனர். இதனால் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story