அடுத்த ஆண்டு 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு


அடுத்த ஆண்டு 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றப்படும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேச்சு
x
தினத்தந்தி 12 July 2018 11:45 PM GMT (Updated: 12 July 2018 7:30 PM GMT)

அடுத்த ஆண்டு 1 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றியமைக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.


கடத்தூர்,

கோபி கலை அறிவியல் கல்லூரியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் சார்பில் பள்ளிக்கூட மாணவர்களின் எதிர்காலம் குறித்த கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி அனைவரையும் வரவேற்றார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் பேசினார். அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார்கள்.

அப்போது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:-


தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகின்ற இந்த ஆட்சியில் கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது. அடுத்த ஆண்டு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை தனியார் பள்ளிக் கூடத்தில் படிக்கும் மாணவ- மாணவிகளின் சீருடைகளைப் போல, அரசு பள்ளிக்கூடங்களிலும் சீருடைகள் மாற்றியமைக்கப்படும்.

இந்தியாவில் 130 கோடி மக்களில் 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் மட்டுமே பட்டயக் கணக்காளர்களாக உள்ளனர். எனவே தமிழக மாணவ- மாணவிகளை பட்டயக் கணக்காளராக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 படித்தவுடன் 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பட்டயக் கணக்காளருக்கான 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக 500 பட்டயக் கணக்காளர்கள் பயிற்சியளிக்க உள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் கல்வித்துறையில் முதன்முதலாக இந்த திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.


‘நீட்’ தேர்வுக்காக அரசு சார்பில் 3 ஆயிரத்து 19 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 1,412 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் விரைவில் வழங்கப்படும். 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வார காலத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நிகழ்ச்சியில் சத்தியபாமா எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு, ஈஸ்வரன், ராஜா கிருஷ்ணன், சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்துரவிச்சந்திரன், கல்லூரி தலைவர் கருப்பணன், செயலாளர் தரணீதரன், முதல்வர் தியாகராசு, டீன் செல்லப்பன், கோபி தாசில்தார் வெங்கடேஸ்வரன், ஆசிரிய, ஆசிரியைகள், பல்வேறு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோபி கல்வி மாவட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.



Next Story