தமிழக பொன்விழா ஆண்டையொட்டி மாவட்ட தடகள விளையாட்டு போட்டி கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்


தமிழக பொன்விழா ஆண்டையொட்டி மாவட்ட தடகள விளையாட்டு போட்டி கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 12 July 2018 11:30 PM GMT (Updated: 12 July 2018 7:36 PM GMT)

தமிழக பொன்விழா ஆண்டையொட்டி மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி ஈரோட்டில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளதாக கலெக்டர் எஸ்.பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

தமிழகம் “தமிழ்நாடு“ என பெயர் சூட்டப்பட்டு 50-ம் ஆண்டு (பொன்விழா) நிறைவடைவதையொட்டி, தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் சார்பில் தடகள விளையாட்டு போட்டிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் வருகிற 19-ந் தேதி காலை 8 மணிக்கு ஈரோடு வ.உ.சி. பூங்கா விளையாட்டு அரங்கில் நடத்தப்பட உள்ளது.

இதில் 100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் 31.12.2017 அன்று 21 வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.

மாவட்ட அளவிலான தடகள போட்டியில் வெற்றி பெறும் வீரர் -வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-ம், 3-ம் பரிசாக ரூ.1,000-ம் வழங்கப்பட உள்ளது. போட்டியில் கலந்து கொள்பவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தது 5 ஆண்டுகளாவது வசித்து வருவதற்கான புகைப்படத்துடன் கூடிய சான்றினை போட்டி நடத்தும் அதிகாரியிடம் வழங்க வேண்டும். சான்றினை வழங்காதவர்கள் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதல் இடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான தடகள போட்டியில் கலந்து கொள்வார்கள். எந்த காரணம் கொண்டும் மாநில அளவிலான தடகள போட்டியில் வீரர், வீராங்கனைகள் நேரடியாக கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாநில அளவிலான தடகள போட்டியில் முதலிடம் பெறும் வீரர்கள், வீராங்கனைகளுக்குரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கமும், 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கமும், 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப்பதக்கமும் வழங்கப்படும்.

பரிசு தொகை வெற்றி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். மாநில அளவிலான தடகள போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக முதல் -அமைச்சர் பரிசுத்தொகை மற்றும் தங்கப்பதக்கத்தை வழங்க உள்ளார்.


மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ -மாணவிகள் தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன் ஈரோடு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரிடம் போட்டி நாளன்று காலை 8 மணிக்குள் நேரில் வரவேண்டும்.

மேற்கண்ட தடகள விளையாட்டு போட்டிகளில் 21 வயதிற்கு உட்பட்ட அனைத்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.

Next Story