பத்திரிகை உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார்


பத்திரிகை உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார்
x
தினத்தந்தி 12 July 2018 11:00 PM GMT (Updated: 12 July 2018 8:31 PM GMT)

பத்திரிகை உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார் என்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் துணைவேந்தர் மணிசங்கர் பேசினார்.

திருச்சி,

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதிதாசன் உயராய்வு மையம், தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை சார்பில் “இனிய தமிழும் இன்றைய நிலையும்-பெரியார், பாரதியார், பாரதிதாசன், சி.பா.ஆதித்தனார், அண்ணா“ என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று காலை தொடங்கியது.

கருத்தரங்கிற்கு பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ப.மணிசங்கர் தலைமை தாங்கினார். பாரதிதாசன் பல்கலைக்கழக உதவி பேராசிரியரும், பாரதிதாசன் உயராய்வு மைய இயக்குனருமான(பொறுப்பு) முனைவர் அ.கோவிந்தராஜன் வரவேற்றார். கருத்தரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் ப.மணிசங்கர் ‘இன்பத் தமிழ்‘ என்ற நூலை வெளியிட்டு பேசியதாவது:-

சி.பா.ஆதித்தனார் அறக்கட்டளை பற்றி கூறுவதில் பெருமைப்படுகிறேன். சி.பா.ஆதித்தனார் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். பாவேந்தர் பாரதிதாசன் மக்களிடையே புரட்சியை ஏற்படுத்தினார். அதனால் தான் அவர் புரட்சிக்கவிஞர் என அழைக்கப்பட்டார். பெரியார், அண்ணா போன்றவர்கள் மக்களிடையே திராவிட கருத்துக்களை பரப்பினார்கள். இதேபோல் சி.பா.ஆதித்தனார் நெல்லை மாவட்டத்தில் பிறந்து பத்திரிகை உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். தற்போது தமிழகத்தில் மிக அதிக அளவில் வாசகர்களை கொண்ட பத்திரிகையாக தினத்தந்தி உள்ளது. இதற்கு சி.பா.ஆதித்தனாரின் கடின உழைப்பு தான் காரணம்.

அந்த காலத்தில் எந்த வசதி வாய்ப்பும் இல்லாமல் இருந்தபோதும், தமிழக அளவில் புரட்சியை ஏற்படுத்தியது தினத்தந்தி தான். சி.பா.ஆதித்தனாரின் மகன் சிவந்திஆதித்தனார் பத்திரிகை மட்டுமின்றி பல்வேறு ஊடகங்களையும் தொடங்கி சாதனை புரிந்தார். அது மட்டுமின்றி திருச்செந்தூர் அருகே ஏராளமான கல்வி நிறுவனங்களை நிறுவி மக்களுக்கு தொண்டாற்றி வருகிறார்கள்.

அந்த காலத்தில் செய்திகள் எளியமுறையில் தரப்படவில்லை. ஏனென்றால் இப்போது இருக்கிற வளர்ச்சி அப்போது கிடையாது. தினத்தந்தி மட்டும் தான் எளியமுறையில் செய்திகளை தந்தது. இதற்கு முழுவதும் பாடுபட்டவர் சி.பா.ஆதித்தனார். அவரது பெயரினால் ஆன அறக்கட்டளை சார்பில் கருத்தரங்கம் நடத்துவதில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெருமைப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் தர்மன் பேசுகையில், “சி.பா.ஆதித்தனார் நாளிதழ் துறையில் புரட்சியை ஏற்படுத்தியவர். செய்தி தாள்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் அவரது மொழிநடை இருந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளுக்கு நாளிதழ்கள் வரும் வழக்கம் மிகவும் குறைவு. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள தேநீர்கடைகளில் தினத்தந்தியை படிக்க ஒரு கூட்டமே கூடி இருக்கும். அந்த கூட்டத்தில் ஒருவருக்கு மட்டும் தான் படிப்பறிவு இருக்கும். அவர் தினத்தந்தியை படிக்க, படிக்க சுற்றி இருப்பவர்கள் கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

அந்த அளவுக்கு சமூகத்தில் மக்களிடையே பல மாற்றங்களை புரிந்தவரின் பெயரால் இந்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. 2015-ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பற்றிய இணையதளம் உருவாக்கப்பட்டது. அந்த இணையதளத்தில் பாரதிதாசனின் வாழ்க்கை வரலாறு, சொற்பொழிவுகள் என பல்வேறு தகவல்கள் சேர்க்கப்பட்டது. அந்த இணையதளம் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்“ என்றார்.

இதனை தொடர்ந்து கருத்தரங்கின் முதல் அமர்வு தொடங்கியது. பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் அ.இலக்குமிபிரபா முதல் அமர்வுக்கு தலைமை தாங்கினார். இதில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாளர்கள் பேசினார்கள்.

“தமிழ் வளர்த்த சி.பா.ஆதித்தனார்“ என்ற தலைப்பில் பேராசிரியர் இ.சூசை பேசும்போது, “சி.பா.ஆதித்தனார் கல்லூரி படிப்பு படித்த காலத்திலேயே அச்சகத்தை தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கினார். அப்படியானால் அவர் பத்திரிகையாளராக மட்டுமல்லாமல் தமிழர்களை உழைப்பாளர்களாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்துள்ளார். ஆகவே ஆதித்தனாரை ‘இதழாளர்‘ என்று மட்டும் சுருக்கி விட முடியாது. தற்போது இளைஞர்களிடம் தமிழ்தேசியம் வளர்ந்து இருக்கிறது. அதற்கு 1950-ம் ஆண்டிலேயே விதைபோட்டு வளர்த்தவர் ஆதித்தனார்.

தனித்தமிழ்நாடு என்ற சிந்தனையில் நம்மைவிட வேகமாகவும், சுறு, சுறுப்புடனும் ஆதித்தனார் செயல்படுகிறார். எனவே அவரை நாம் பின்பற்ற வேண்டும் என்று 1958-ம் ஆண்டு மன்னார்குடியில் நடந்த சுதந்திர தமிழ்நாடு திட்ட மாநாட்டில் தந்தை பெரியார் பேசி உள்ளார். அந்த அளவுக்கு தனித்தமிழ்நாடு என்ற சிந்தனையை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் சி.பா.ஆதித்தனார்.“ என்று பேசினார்.

தொடர்ந்து 2-வது அமர்வுக்கு மகளிரியல்துறை பேராசிரியர் ந.முருகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் வேதாந்த மரத்தின் வேர் என்ற தலைப்பில் முனைவர் சா.நீலகண்டன், பெரியாரின் சமூக சிந்தனைகள் என்ற தலைப்பில் முனைவர் அ.செந்தில், படைப்புகளால் படை நடத்திய அண்ணா என்ற தலைப்பில் முனைவர் நீ.சரவணன், பாவேந்தர் பாடல்களின் பலவகை பின்னணிகள் என்ற தலைப்பில் முனைவர் தே.இந்திரகுமாரி ஆகியோர் பேசினர்.

2-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) கருத்தரங்கு நடக்கிறது. தொடர்ந்து மாலையில் நடைபெறும் நிறைவரங்கத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்குகிறார். 

Next Story