தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமா? அமித்ஷாவின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை அமைச்சர் உதயகுமார் பேட்டி


தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமா? அமித்ஷாவின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை அமைச்சர் உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 13 July 2018 3:15 AM IST (Updated: 13 July 2018 2:05 AM IST)
t-max-icont-min-icon

அமித்ஷாவின் பேச்சை பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்று, அமைச்சர் உதயகுமார் கூறினார்.

மதுரை,

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் தான் தமிழ்நாட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. காங்கிரஸ் அல்லாத ஊழல் அற்ற அரசை அமைப்போம் என்று பா.ஜ.க. மற்ற மாநிலங்களில் சொல்லி வருகிறது. அதே அர்த்தத்தில் தான் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா தமிழகத்திற்கு வந்த போது பேசியுள்ளார். இது அவர்களின் வழக்கமான பேச்சு. அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.

தமிழகத்தில் மலரப்போவது இரட்டை இலையா அல்லது வேறு மலரா என்பது வருகிற தேர்தலில் தெரியவரும்.


மத்தியில் ஆட்சிக்கு வருபவர்கள் தங்களின் கருவியாக வருமான வரித்துறையை பயன்படுத்துகின்றனர். இது மற்றவர்களை பயமுறுத்தவா அல்லது நியாயமாக நடந்த சோதனையா என்பது நீதிமன்ற தீர்ப்பில் தெரியவரும்.

பாராளுமன்றத்தேர்தல் கூட்டணி குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் தான் கூட்டணி பற்றி தெரிவிப்பார்கள்.

மத்திய அரசுக்கு அடிமையாக நாங்கள் செயல்படவில்லை. தாய், பிள்ளை உறவு போன்று மத்திய அரசுடன் தமிழக அரசு இருந்து வருகிறது. முட்டை கொள்முதல் நிறுவனத்தில் நடந்த சோதனை என்பது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான். இதனால் எந்த பாதிப்பும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

“இந்தியாவில் தமிழகம் தான் ஊழலில் முதலிடத்தில் இருக்கிறது என்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பேசியுள்ளார். ஊழல் செய்தவர்கள் யார், ஊழலில் திளைத்தவர்கள் யார் என்று மக்களுக்குத் தெரியும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story