மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த தங்கையை கடத்திச் செல்ல முயன்ற அண்ணன் + "||" + Love marriage Sister Brother who tried to kidnap

காதல் திருமணம் செய்த தங்கையை கடத்திச் செல்ல முயன்ற அண்ணன்

காதல் திருமணம் செய்த தங்கையை கடத்திச் செல்ல முயன்ற அண்ணன்
உத்தரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்த தங்கையை சொந்த ஊருக்கு கடத்திச் செல்ல முயன்ற அண்ணனை விமான நிலைய போலீசார் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.
ஆலந்தூர்,

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதிஷ்குமார்(வயது 30). இவர், அதே பகுதியை சேர்ந்த நிலானி(27) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மிதிஷ்குமார் தனது காதல் மனைவி நிலானியுடன் ரெயிலில் சென்னை வந்தார்.


தற்போது சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் கணவன்-மனைவி இருவரும் வசித்து வருகின்றனர். மிதிஷ்குமார், பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் நிலானியின் அண்ணன் விஜய்சிங், காதல் திருமணம் செய்து கொண்ட தனது தங்கை நிலானியை தேடி நண்பர்களுடன் சென்னை வந்தார். தனது தங்கை சோழிங்கநல்லூரில் வசித்து வருவதை கண்டு பிடித்தார்.

பின்னர் தங்கையின் வீட்டுக்கு சென்ற அவர், நைசாக பேசி தனது தங்கை நிலானியை உத்தரபிரதேசத்துக்கு அழைத்து செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அழைத்து வந்தார். உள்நாட்டு முனையத்தில் இருந்து லக்னோவுக்கு செல்லும் விமானத்தில் தங்கையை அழைத்து செல்ல இருந்தார்.

அப்போது நிலானி, திடீரென தன்னை கடத்திச் செல்வதாக கூறி கூச்சலிட்டார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய போலீசார், விரைந்து சென்று அவரிடம் விசாரித்தனர்.

போலீசாரிடம் நிலானி கூறும்போது, “காதல் திருமணம் செய்து கொண்ட என்னை, கணவரிடம் இருந்து பிரித்து, வலுக்கட்டயமாக சொந்த ஊருக்கு கடத்திச் செல்ல எனது அண்ணன் முயற்சிக்கிறார். நான் எனது காதல் கணவருடன்தான் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்” என்றார்.

இதையடுத்து போலீசார், சோழிங்கநல்லூரில் இருந்த மிதிஷ்குமாரை வரவழைத்து அவருடன் நிலானியை அனுப்பி வைத்தனர். பின்னர் அவருடைய அண்ணன் விஜய்சிங் மற்றும் அவரது நண்பர்களுக்கு விமான நிலைய போலீசார் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.