மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளி கைது
திருப்பூர் அருகே மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வீரபாண்டி,
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் வீரபாண்டியை அடுத்த கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 49). இவர் தச்சு வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீரபாண்டியை சேர்ந்த 7 வயதான 2-ம் வகுப்பு மாணவிக்கு இனிப்பு கொடுத்து ஏமாற்றி அழைத்துள்ளார். அந்த மாணவி, சுப்பிரமணி வைத்திருந்த இனிப்பை வாங்குவதற்கு அருகில் வந்தாள். உடனே அந்த மாணவியை, பிடித்து இழுத்து திடீரென்று சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சுப்பிரமணியின் பிடியில் இருந்து மாணவி விடுபட முயன்றும் அவளால் முடியவில்லை. இதனால் மாணவி அழத்தொடங்கினாள். மாணவி அழும் குரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தபோது, சுப்பிரமணி, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை அந்த பகுதி பொதுமக்கள் எச்சரித்தனர். இதனால் பயந்துபோன சுப்பிரமணி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதையடுத்து மாணவியின் பெற்றோர் வீரபாண்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 2-ம் வகுப்பு மாணவியிடம் தொழிலாளி சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story