போலி ஏ.டி.எம். கார்டு மூலம் மோசடி: சந்துருஜியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு அனுமதி கோரி கோர்ட்டில் இன்று மனு


போலி ஏ.டி.எம். கார்டு மூலம் மோசடி: சந்துருஜியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு அனுமதி கோரி கோர்ட்டில் இன்று மனு
x
தினத்தந்தி 12 July 2018 10:30 PM GMT (Updated: 12 July 2018 9:14 PM GMT)

போலி ஏ.டி.எம். கார்டு மூலம் மோசடி செய்த வழக்கில் கைதான சந்துருஜியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு அனுமதி கோரி புதுவை கோர்ட்டில் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.

புதுச்சேரி,

புதுவையில் பொதுமக்களின் வங்கி கணக்குகளின் இருந்து நூதன முறையில் பணம் திருடு போவதாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதனை தொடர்ந்து சி.ஐ.டி. சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் வழிகாட்டுதலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜிந்தா கோதண்டராமன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது இந்த மோசடியில் புதுவை மற்றும் தமிழகத்தை சேர்ந்த பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக புதுவை பல்கலைக்கழக ஊழியரான பாலாஜி, ஜெயச்சந்திரன் என்கிற சந்துரு, கமல், சரவணன் என்கிற ஷியாம், டாக்டர் விவேக் ஆனந்த், கணேசன், சிவக்குமார், டேனியல் சுந்தர் சிங், அப்துல் சமத், சத்யா, மணிசந்தர், பீட்டர், தினேஷ், இர்பான் ரகுமான், சுதாகர் ஆகிய 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த வழக்கில் முன்னாள் அ.தி.மு.க. பிரமுகர் சந்துருஜி உள்பட சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.


இதனை தொடர்ந்து சந்துருஜியை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து சி.ஐ.டி. போலீசார் வலைவீசி தேடி வந்தனர். 100-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி வந்ததால் அவரை கைது செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. அடிக்கடி தனது இருப்பிடத்தையும் சந்துருஜி மாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்து புதுவைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்தனர்.


அப்போது அவர், தனது பெயரில் சுவைப் எந்திரங்களை வாங்கி அவற்றை கூட்டாளிகளிடம் வழங்கி ஏ.டி.எம். கார்டு, கடன் அட்டைகளை போலியாக தயாரித்து மோசடியாக பணம் எடுத்துள்ளார். சுவைப் எந்திரங்கள் வழங்கியவர்களுக்கும், மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும் கமிஷன் அடிப்படையில் பணம் கொடுத்ததாக போலீசில் தெரிவித்துள்ளார்.

மோசடி செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் கூட்டாளிகள் பற்றிய விவரங்களை போலீசார் கேட்ட போது பதில் எதுவும் கூறாமல் மவுனமாக இருந்துள்ளார். இந்தநிலையில் போலீசார் அவரை நேற்று மாலை புதுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


இந்த நிலையில் சந்துருஜியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர்கள் புதுவை கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்ய உள்ளனர். கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் சந்துருஜியை காவலில் வைத்து விசாரணை நடத்த உள்ளனர். அப்போது இந்த மோசடியின் பின்னணி குறித்த மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என போலீசார் கருதுகிறார்கள்.

இந்த வழக்கில் சந்துருஜிக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் விவரங்களை போலீசார் திரட்டி வருகிறார்கள். அடைக்கலம் கொடுத்தவர்களும் கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story