தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை


தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 July 2018 10:30 PM GMT (Updated: 12 July 2018 9:48 PM GMT)

தடிக்காரன்கோணம் பகுதியில் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழகியபாண்டியபுரம்,

குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டியை அடுத்த தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, காளிகேசம், மாறாமலை, பாலமோர் போன்ற மலையோர பகுதிகளில் ஏராளமான தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் தென்னை, வாழை, பலா, ரப்பர், கிராம்பு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன.

தற்போது, மலை பகுதியில் இருந்து யானைகள் கூட்டம்- கூட்டமாக இடம்பெயர்ந்து விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது வருகிறது.

தடிக்காரன்கோணம் அருகே கொத்தளம்பள்ளம் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களில் புகுந்து தென்னை, வாழை, மா, பலா போன்றவற்றை அழித்து சேதப்படுத்தி வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

மேலும் யானைகள் கூட்டமாக சாலைகளில் உலா வருகின்றன. இதனை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்கிறார்கள்.

இந்த பகுதியில் உள்ள தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், தோட்டங்களுக்கு வேலைக்கு செல்ல தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே, தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானைகளை தடுக்க வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story