கிணத்துக்கடவு பகுதியில் குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும்
கிணத்துக்கடவு பகுதியில் குளங்களை தூர்வாரி மழை நீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நெகமம்,
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் குளம், குட்டைகளில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது. இதனால் குடிநீருக்கும், விவசாய தேவைக்கும் தண்ணீர் இல்லாமல் தவித்து வந்தனர். எனவே ஒன்றியத்தில் உள்ள குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் 34 ஊராட்சிகள் உள்ளன. இதில் ஆண்டிபாளையம், பெரியகளந்தை, பனப்பட்டி, செட்டியக்காபாளையம், வடசித்தூர், கப்பளாங்கரை, சிறுக்களந்தை, தேவணாம்பாளையம், அரசம்பாளையம், வரதனூர், கோதவாடி, கக்கடவு, எம்மேகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள குட்டைகள் அதிகப்படியான ஆழமும், அகலமும் கொண்டவையாகும்.
இந்த குட்டைகளை கோடை மற்றும் பருவ மழை பெய்யும் போது சுத்தம் செய்து மழைநீரை சேமித்தால் அப்பகுதியில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இதனை செய்யாததால் ஒரு சில குட்டைகளில் முட்புதர்கள் வளர்ந்தும், கழிவுகளை கொண்டு வந்து கொட்டியும் விடுகின்றனர். அப்படி கழிவுகளை கொட்னால் குட்டைகளில் தண்ணீர் தேங்குவது சிரமம். குட்டைகளில் கழிவுகளை கொட்டாமல் இருக்கவும், முட்புதர்கள், செடிகள் வளராமல் தடுக்கவும் அந்தந்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்டைகளை சுற்றிலும் கம்பிவேலி அமைத்து, குட்டைகளை தூர் வாரினால் மழை காலத்தில் தண்ணீரை சேமிக்க முடியும். மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் உயரும்.
இதனால் அனைத்து ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் சேமிக்கப்படும். சேமிப்பான தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஊராட்சி நிர்வாகம் தாராளமாக வழங்கலாம். அப்படி வழங்கும் நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். இதன் மூலம் பொதுமக்களும், விவசாயிகளும் பயனடைவார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story