மணல் திருட்டை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் சந்திரபிரபா எம்.எல்.ஏ. அறிவுறுத்தல்
மணல் திருட்டை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருவண்ணாமலையில் இருந்து பந்தபாறை செல்லும் சாலையில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருவண்ணாமலை முதல் பந்தபாறை வரை 3½ கி.மீ. சாலை போட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்றன. இந்த சாலையில் டிராக்டர்கள் அதிக அளவில் செல்வதால் புதிதாக அமைக்கப்பட்ட சாலை பல இடங்களில் சேதமடைந்தது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சந்திரபிரபா எம்.எல்.ஏ.யிடம் முறையிட்டனர். அவர் உடனடியாக வருவாய்துறை, காவல்துறையினருடன் சென்று சாலையை பார்வையிட்டு புதிதாக அமைக்கப்பட்ட சாலை சேதமடைய என்ன காரணம் என்று விசாரணை நடத்தினார். அப்போது அந்த பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் இந்த பகுதியில் அதிக அளவில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக டிராக்டர்கள் மணல் ஏற்றிச் செல்வதால் சாலை சேதமடைந்தது என்று கூறினர்.
இதனைத்தொடர்ந்து சந்திரபிரபா, விவசாயிகளின் நலன் கருதி கண்மாய்களில் மண் அள்ள அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் சிலர் இரவு, பகலாக டிராக்டர்களில் மணல் அள்ளுவதாக தெரிகிறது. மணல் திருடுவோரை காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் மாவட்ட அளவிலான காவல்துறை மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கூறினார்.
இந்த ஆய்வின்போது தாசில்தார் பாலசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story