வேலூர் மாவட்ட செய்தி சிதறல்: திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது
குடியாத்தம் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் மற்றும் போலீசார் சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அணைக்கட்டு அருகே உள்ள புதூரை அடுத்த மூலகேட் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் முருகன் என்கிற சாவடி முருகன் (வயது 29), குடியாத்தம் போடிப்பேட்டையை சேர்ந்த துரை மகன் பிரவின்குமார் (25), மணிவண்ணன் மகன் தமிழரசன் (25) என்பதும், குடியாத்தம் சுற்றுப்புற பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும், மேலும் அவர்கள் பழைய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து 8 பவுன் நகைகளையும், 4 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
* வாணியம்பாடியை அடுத்த இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (40), விவசாயி. இவர், நேற்று நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
* நாட்டறம்பள்ளியை அடுத்த சாமகவுண்டனூரை சேர்ந்தவர் ஞானசேகரன் (24). இவரது மனைவி சத்யா (20). இவர், வீட்டில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
* ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் பணிபுரிந்து வருபவர் மின்னல்ராஜ் (30). இவர், நேற்று சென்னை - பெங்களூரு நோக்கி செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஆம்பூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு செல்வதற்காக பொது பெட்டியில் பயணம் செய்தார்.
அப்போது மின்னல்ராஜின் பர்சை ஆம்பூர் நடராஜபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் அஜித்குமார் (20) திருட முயன்றார். உடனே மின்னல்ராஜ், அஜித்குமாரை கையும், களவுமாக பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்தனர்.
* வாலாஜா அருகே சுங்கச்சாவடி பகுதியில் கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்று விட்டது.
இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
* ரத்தினகிரியை அடுத்த மேலகுப்பத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி வள்ளி (45). அதே பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (28) இவர்களின் நிலங்கள் அருகருகே உள்ளது.
இந்த நிலையில் ஏழுமலை தனது நிலத்தில் இருந்த முட்செடிகளை வெட்டி வள்ளியின் நிலத்தில் போட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஏழுமலை, வள்ளியை ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதுகுறித்து ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.
* காவேரிப்பாக்கத்தில் உள்ள உப்புமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (25), பெயிண்டர். இவர், நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்று விட்டு, அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றுக்குக் குளிக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
நேற்று காலை கிணற்றின் அருகே நிலத்தில் கார்த்தி பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து விட்டு காவேரிப்பாக்கம் போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர். பிணத்தைப் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி காவேரிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கார்த்தி குளிக்க சென்றபோது, நிலத்தில் தவறி கீழே விழுந்து இறந்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
Related Tags :
Next Story