சேலம் அருகே, 8 வழி சாலை திட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்டார்


சேலம் அருகே, 8 வழி சாலை திட்டம் குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்டார்
x
தினத்தந்தி 13 July 2018 5:07 AM IST (Updated: 13 July 2018 5:07 AM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே 8 வழி சாலை திட்டம் குறித்து அனைத்திந்திய மாதர் சங்க மாநில பொருளாளர் மல்லிகா, விவசாயிகளிடம் கருத்து கேட்டார்.

அயோத்தியாப்பட்டணம்,

சேலம் - சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக எல்லைக்கற்கள் நடப்பட்டன. தற்போது எல்லைக்கற்களுக்கு இடையே உள்ள நிலங்களை அளவீடு செய்யும் பணியும், மரங்கள், கிணறுகள், வீடுகள் ஆகியவற்றை கணக்கிடும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்களும், பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் பருத்திக்காடு, சீரிக்காடு, ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் நேற்று அனைத்திந்திய மாதர் சங்க மாநில பொருளாளர் மல்லிகா, 8 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட இடங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் 8 வழி சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டார்.

அப்போது சீரிக்காடு, பருத்திக்காடு, ராமலிங்கபுரம் ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள், பெண்கள் அனைவரும் எங்களுக்கு 8 வழி சாலை வேண்டாம். நிலம்தான் வேண்டும் என்று அவரிடம் கூறினார்கள். அப்போது மல்லிகாவுடன் மாதர் சங்க மாநில துணை செயலாளர் சசிகலா, சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஜோதிலட்சுமி, பரமேஸ்வரி, ஞானசவுந்தரி, ராசாத்தி ஆகியோர் உடன் சென்றனர்.

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள பூலாவரி புஞ்சைக்காடு பகுதியில் சேலம் - சென்னை 8 வழி பசுமை சாலைக்கு நிலம் அளவிடும் பணி நேற்று தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற்றது. இந்த பணியில் நில எடுப்பு சிறப்பு தனி தாசில்தார் பத்மபிரியா தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அப்போது புஞ்சைக்காடுக்கும், ஆத்துக்காடுக்கும் இடையே உள்ள சித்தனேரி பகுதியில் மோகனசுந்தரம் என்பவரது வீடு சாலை அமையும் இடத்தில் வருகிறது. இதனால் அவர் நிலம் அளவிடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உங்களது புகாரை தெரிவியுங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார். தொடர்ந்து நிலம் அளவிடும் பணி நடைபெற்றது.

Next Story