3 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-ந் தேதி மதுரை வருகை


3 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 15-ந் தேதி மதுரை வருகை
x
தினத்தந்தி 12 July 2018 10:00 PM GMT (Updated: 13 July 2018 12:08 AM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 15-ந் தேதி மதுரை வருகிறார். அவர், பரவையில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம் மற்றும் காளவாசலில் ரூ.55 கோடியில் உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் அவர் அ.தி.மு.க. சாதனை விளக்க சைக்கிள் பேரணியையும் தொடங்கி வைக்கிறார்.

மதுரை,


மதுரை துவரிமான் கண்மாய் தூர்வாரும் பணியை அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் நேற்று காலை தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

துவரிமான் கண்மாய் ரூ.50 லட்சம் செலவில் குடிமராமத்து செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் துவரிமான் உள்ளிட்ட 5 கண்மாய்கள் மேற்கு சட்டமன்ற தொகுதியில் தூர்வாரப்படுகிறது. மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது போல வைகை அணையை உரிய நேரத்தில் தூர்வார முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார். மதுரை நகரை சர்வதேச நகராக மாற்றும் வகையில் துணைக்கோள் நகரம், உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன.


மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளவாசல் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரூ.55 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது. மேலும் பரவையில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை வருகிற 15-ந் தேதி நடக்கிறது.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மதுரை வரும் முதல்-அமைச்சரை வரவேற்க மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காளவாசல், ஆரப்பாளையம், பரவை, விளாங்குடி உள்ளிட்ட 10 இடங்களில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். அதை தொடர்ந்து முதல்-அமைச்சரை வரவேற்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநகர நிர்வாகிகள் துரைப்பாண்டியன், வில்லாபுரம் ராஜா, தங்கம், ஜாமல் மைதீன், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற இணைச்செயலாளர் கிரம்மர்சுரேஷ், இளைஞரணி செயலாளர் சோலைராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


ஜெயலலிதா பேரவை சார்பில் அரசின் சாதனைகளை விளக்கி சைக்கிள் பேரணி தமிழகம் முழுவதும் நடத்தப்பட உள்ளது. மதுரையில் வருகிற 15-ந் தேதி பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெறுகிறது. இந்த பேரணியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இதற்கான புதிய சைக்கிள் பொருத்தும் பணி ரிங்ரோடு அம்மா திடலில் நடைபெற்று வருகிறது. அதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. அவரது வழியில் செயல்பட்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆட்சி நடத்தி வருகிறார்கள். இந்த ஆட்சியில் தான் பெண்களுக்கு மொபட் வண்டி, காவிரியில் உரிமையை நிலை நாட்டியது. எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. ஜல்லிக்கட்டு உரிமை மீட்டெடுப்பு. குடிமராமத்து திட்டம், விலையில்லாத வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்பட்டது. 8 வழி பசுமை சாலை, 4 வழி சாலை என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி ஜெயலலிதா பேரவை சார்பில் 1,000 பேர் கலந்து கொள்ளும் சைக்கிள் பேரணி தொடக்க விழா வருகிற 15-ந் தேதி நடக்கிறது. 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் தொடக்க விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை தொடங்கி வைக்கிறார்.


15-ந் தேதி ரிங்ரோடு அம்மா திடலில் தொடங்கும் இந்த சைக்கிள் பேரணி ஒத்தக்கடை, தெற்குதெரு, மேலூர் வழியாக அழகர்கோவிலில் முடிகிறது. பின்னர் 16-ந் தேதி அங்கிருந்து தொடங்கி திருமங்கலத்தில் முடிகிறது. 17-ந் தேதி பேரையூர், 18-ந் தேதி செக்கானூரணி, 19-ந் தேதி செக்கானூரணியில் இருந்து புறப்பட்டு நாகமலை புதுக்கோட்டை, விராட்டிபத்து, காளவாசல், ஆரப்பாளையம், தெப்பக்குளம், அண்ணாநகர் வழியாக ரிங்ரோடு அம்மா திடலில் முடிவடைகிறது. மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் இந்த சைக்கிள் பேரணி நடக்கிறது. ஒவ்வொரு நாளும் சைக்கிள் பேரணி முடிவடையும் இடத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும், சாதனை விளக்க பொதுக்கூட்டமும் நடைபெறும். வருகிற பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தான் இந்த பேரணியை தொடங்கி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், இளங்கோவன், மாவட்ட நிர்வாகிகள் தமிழரசன், அய்யப்பன், வக்கீல் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story