கே.ஆர்.எஸ். அணையில் 20-ந் தேதி குமாரசாமி சிறப்பு பூஜை செய்கிறார்


கே.ஆர்.எஸ். அணையில் 20-ந் தேதி குமாரசாமி சிறப்பு பூஜை செய்கிறார்
x
தினத்தந்தி 12 July 2018 11:50 PM GMT (Updated: 12 July 2018 11:50 PM GMT)

தொடர் கனமழையால் 118 அடியை எட்டிய கே.ஆர்.எஸ். அணையில் வருகிற 20-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி பூஜை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மைசூரு,

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி, கபிலா, துங்கா, பத்ரா உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக காவிரியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாஅருகே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்) அணையின் நீர்மட்டம் மளமளவென அதிகரித்தது.

நேற்றைய நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணை 118 அடியை எட்டியது. அணையின் மொத்த நீர்மட்ட கொள்ளளவு 124.80 அடி ஆகும். நேற்று அணைக்கு வினாடிக்கு 37 ஆயிரத்து 783 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 768 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு அருகே கபிலா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கபினி அணைக்கும் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டிவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த அணையின் மொத்த நீர் மட்டம் 2,284.00 அடி(கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். அணையில் தற்போது 2,282.09 அடி தண்ணீர் உள்ளது.

இருப்பினும் அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அப்படியே நேரடியாக தமிழகத்திற்கு செல்கிறது. அதன்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 768 கன அடி வீதமும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வீதமும் என தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 53,768 கன அடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இவ்விரு அணைகளைத் தவிர கர்நாடகத்தில் உள்ள மற்ற அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக லிங்கனமக்கி, சுபா, வரகி, ஹாரங்கி, ஹேமாவதி, பத்ரா, துங்கபத்ரா, கட்டபிரபா, மல்லபிரபா, அலமட்டி, நாராயணபுரா ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழை காரணமாக இந்த அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அனைத்து அணைகளும் நிரம்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே தொடர் கனமழையால் 118 அடியை எட்டி உள்ள கே.ஆர்.எஸ். அணை வருகிற 20-ந் தேதிக்குள் தனது முழு கொள்ளளவான 124.80 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் வருகிற 20-ந் தேதி முதல்-மந்திரி குமாரசாமி கே.ஆர்.எஸ். அணையில் சிறப்பு பூஜை செய்து வழிபட இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சித்தராமையா முதல்-மந்திரியானபோது கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டியது. அப்போது சித்தராமையா, கே.ஆர்.எஸ். அணையில் பூஜை செய்தார்.


Next Story