வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும்
தேனி மாவட்ட வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்ட வனப்பகுதிகள் இரண்டு பிரிவாக உள்ளன. மேகமலை வனஉயிரின சரணாலய பகுதிகளாக மேகமலை, சின்னமனூர், கம்பம், கூடலூர் ஆகியவை உள்ளது. இங்கு பாதுகாக்கப்பட்ட காடுகள் விரிந்து பரந்து கிடக்கின்றன. கம்பம், கூடலூர், உத்தமபாளையம் ஆகிய வனப்பகுதிகளில் தேக்கு, தோதகத்தி, சந்தனம் உள்ளிட்ட மரங்களும், புலி, மான்கள், யானைகள், முயல் என விலங்குகளும் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காட்டுக்குள் மான்களை வேட்டையாடி அதன் இறைச்சிகளை சுற்றுவட்டார கிராமங்களில் விற்பனை நடந்தது. அப்போது வேட்டைக்காக கள்ளத்துப்பாக்கிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து வன சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, வனத்துறையினர் தீவிர ரோந்து சென்று கள்ளத்துப்பாக்கிகள் அதிகமான அளவில் பறிமுதல் செய்யப்பட்டன. வன விலங்குகளை வேட்டையாடியவர்கள் திருந்தி வேறு தொழில் செய்வதற்கு அரசே உதவிகள் புரிந்தன. இதனால் வன விலங்குகள் வேட்டை தடுக்கப்பட்டன.
இந்த நிலையில் மீண்டும் வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் புதிதாக உருவாகி உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த கும்பல் அடர்ந்த காடுகளை மையமாக கொண்டு பதுங்கி உள்ளனர். அங்கு காட்டுபன்றிகள், மான்கள், முயல் போன்றவற்றை வேட்டையாடுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
எப்போதுமே அடர்ந்த காடுகளுக்குள் நுழைவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும். ஆனால் வனபாதுகாவலர்கள், வனவர்கள் சரியான முறையில் கண்காணிக்காததால், வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பல் நடமாட்டத்தை தடுக்க முடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் இந்த கும்பலை சேர்ந்தவர்கள் தற்போது போடி, தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மேகமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் முகாமிட்டு விலங்குகளை வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது. அவற்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேகமலை வனப்பகுதியில் மான் மற்றும் யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. எனவே வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story