மோட்டார் சைக்கிள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மூதாட்டி, பேரன் படுகாயம்
பழனி அருகே, மோட்டார் சைக்கிள் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மூதாட்டி, பேரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெய்க்காரப்பட்டி,
கோவை மாவட்டம் வெள்ளலூரை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகன் கார்த்திக் (வயது 20). நாகராஜின் தாய் அய்யம்மாள் (65). நேற்று காலையில், கார்த்திக் தனது பாட்டியுடன் மோட்டார் சைக்கிளில் பழனி அருகே உள்ள கரிக்காரன்புதூரில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.
உடுமலை-பழனி சாலையில் வண்டிவாய்க்கால் அருகே வந்த போது, சாலையோரத்தில் இருந்த மரம் திடீரென சாய்ந்து இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த அய்யம்மாள், கார்த்திக் ஆகியோர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.
மரத்தின் அடியில் சிக்கி 2 பேர் தவிப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோட்டார் சைக்கிள் மீது சாய்ந்த மரம் ரோட்டின் குறுக்காக விழுந்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தினர்.
அதன்பிறகே போக்குவரத்து சீரானது. பின்னர் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வண்டிவாய்க்கால் பகுதியில் பலத்த காற்றுவீசியதாலும், மரம் அருகே வாய்க்கால் அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டதாலுமே மரம் சாய்ந்து விழுந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story