தபால் நிலையங்களில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது


தபால் நிலையங்களில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 13 July 2018 5:35 AM IST (Updated: 13 July 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாவட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் ஆதார் பதிவதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்க உள்ளது.

மதுரை

மதுரையில் ஸ்காட்ரோடு தலைமை தபால்நிலையம், தல்லாகுளம் தலைமை தபால் நிலையம், அரசரடி தலைமை தபால் நிலையம் மற்றும் ஏராளமான துணை தபால்நிலையங்கள் உள்ளன. இங்கு தபால்துறை சார்ந்த பணிகள் தவிர, பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தல், டி.என்.பி.எஸ்.சி., யூ.பி.எஸ்.சி. உள்ளிட்ட வேலைவாய்ப்பு பதிவுக்கு விண்ணப்பித்தல், வங்கி சேவைகள், இன்சூரன்சு சேவைகள் மற்றும் ஆதார் பதிவு உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான சிறந்த ஆதார் பதிவு முகாம் விருது மதுரை ஸ்காட் ரோட்டில் உள்ள தலைமை தபால்நிலையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, நாடு முழுவதும் 60 தபால் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தென்மண்டல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்ட தபால் நிலையங்கள் உள்ளன.

இதில் மதுரை கோட்டத்தில் மட்டும் 48 தபால்நிலையங்களில் ஆதார் பதிவு, திருத்த மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மதுரை மண்டலத்தில் ஸ்காட்ரோடு தலைமை தபால் நிலையத்துக்கு தேசிய அளவிலான சிறந்த ஆதார் பதிவு முகாம் விருது கிடைத்துள்ளது.


இந்த நிலையில், பொதுமக்களுக்கு ஆதார் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக நாளை (சனிக்கிழமை) மதுரை கோட்டத்தில் உள்ள 48 தபால்நிலையங்களில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

இந்த முகாமில் சம்பந்தப்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் எண் பதிவு செய்து கொள்ளலாம். மதுரை நகரில் ஸ்காட்ரோடு, தல்லாகுளம், அரசரடி தலைமை தபால் நிலையங்களில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், புதிதாக ஆதார் எண் பதிவு செய்ய எந்த கட்டணமும் கிடையாது. ஆதார் எண் அட்டையில் பெயர் பிழை திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளுக்கு மட்டும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் வசூலிக்கப்படும்.

Next Story