மக்கள்தொகையை கட்டுப்படுத்த மலைக்கிராமங்களில் விழிப்புணர்வு கலெக்டர் அறிவுரை


மக்கள்தொகையை கட்டுப்படுத்த மலைக்கிராமங்களில் விழிப்புணர்வு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 13 July 2018 5:42 AM IST (Updated: 13 July 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

மக்கள்தொகையை கட்டுப்படுத்த மலைக்கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர் டி.ஜி.வினய் பேசினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் உலக மக்கள்தொகை தினத்தை யொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை கலெக்டர் டி.ஜி.வினய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இந்த பேரணி தலைமை தபால் நிலையம், காமராஜர் பஸ்நிலையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையை சென்றடைந்தது. இதையடுத்து அங்கு மக்கள்தொகை தின கருத்தரங்கு நடந்தது. இதில் கலெக்டர் தலைமை தாங்கி, பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக கலெக்டர் பேசியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சியால் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம். எனவே, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் களப்பணியாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும். அதிக குழந்தைகளை பெற்றெடுப்பதால், உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும்.

வடமதுரை, சாணார்பட்டி, நத்தம் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள்தொகையை குறைப்பதில் முதல் மாவட்டமாக திண்டுக்கல்லை உருவாக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அரசு திட்டங்களை பெற்று பயன்பெறும் மக்கள், தாமாக முன்வந்து மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறுஅவர் பேசினார்.

இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதிபிரகாஷ், துணை இயக்குனர் ராமச்சந்திரன், அரசு மருத்துவமனை நிலைய அலுவலர் சிவக்குமார் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர். 

Next Story