மானாமதுரை அருகே புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி மையம் கட்டும் பணி தொடக்கம்


மானாமதுரை அருகே புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி மையம் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 13 July 2018 4:30 AM IST (Updated: 13 July 2018 5:47 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை அருகே புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி மையம் கட்டும் பணி நேற்று பூமிபூஜையுடன் தொடங்கியது.

மானாமதுரை,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மாட்டிற்கு புகழ்பெற்றது, புலிக்குளம் காளை. இதனால் மானாமதுரை அருகே உள்ள புலிக்குளம் பகுதியில் மாட்டின ஆராய்ச்சி மையம் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் மானாமதுரை மற்றும் ஈரோடு மாவட்டம் காங்கேயம் என 2 இடங்களில் மாட்டின ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவித்தார். இந்த மையம் அமைக்க தலா ரூ.1 கோடியே 6 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதில் ஒரு பகுதியாக மானாமதுரை அருகே மாங்குளத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கின அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அந்த நிலத்தை சுத்தம் செய்யும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் நேற்று மாங்குளத்தில் மாட்டின ஆராய்ச்சி மையம் கட்டுமான பணிக்கான தொடக்க விழா பூமிபூஜையுடன் தொடங்கியது. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கின அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியரும், புலிக்குளம் மாட்டின ஆராய்ச்சி மைய இயக்குனருமான சிவசீலன் தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார். இதில் விவசாயிகளும், மாடுகள் வளர்ப்போரும் கலந்துகொண்டனர்.

பின்னர் அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், கட்டுமான பணிகள் 3 மாதத்தில் முடிவடைந்து ஆராய்ச்சி மையம் செயல்பட தொடங்கும். சென்னை காட்டுப்பாக்கத்தில் புலிக்குளம் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது நாள் ஒன்றுக்கு 2 லிட்டர் மட்டுமே கறக்கும் திறனுள்ள இவற்றின் கறவை திறன் இருமடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற மாடுகளை விட வீரம் மிகுந்து காணப்படும் இந்த மாட்டின் ஜீன்கள் ஆய்வு செய்யப்படஉள்ளது. கடும் வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஆராய்ச்சி மையத்தில் கால்நடைகளுக்கு குறைந்த செலவில் தீவனம் வழங்கப்படும் என்றனர்.

Next Story