வீழ்ச்சி அடைந்து வரும் வேளாண்மை
நகரப் பகுதிகளின் விரிவாக்கம் என்பது வேளாண்மை சாகுபடி பரப்பளவு குறைய மிக முக்கிய காரணமாக உள்ளது.
தமிழ்நாட்டின் முக்கியப் பயிரான நெல் கடந்த 2001-2002-ம் ஆண்டில் மாநிலம் முழுவதும் 20 லட்சத்து 60 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது. அதுவே அடுத்த பத்தாண்டுகளில் அதாவது 2011-12-ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதேபோல் 2001-02-ம் ஆண்டில் 3 லட்சத்து 17 ஆயிரம் ஹெக்டேராக இருந்த சோளம் சாகுபடி பரப்பு 2011-12-ம் ஆண்டில் 1 லட்சத்து 98 ஆயிரம் ஹெக்டேராகவும், 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேராக இருந்த கம்பு சாகுபடி பரப்பு வெறும் 47 ஆயிரம் ஹெக்டேராகவும், 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேராக இருந்த கேழ்வரகு சாகுபடி பரப்பு, 83 ஆயிரம் ஹெக்டேராகவும் குறைந்துவிட்டன.
நிலக்கடலை சாகுபடி பரப்பு 6 லட்சத்து 63 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து 3 லட்சத்து 86 ஆயிரம் ஹெக்டேராகவும், எள் சாகுபடி பரப்பு 84 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து 43 ஆயிரம் ஹெக்டேராகவும் குறைந்துள்ளன.இது தவிர சிறு தானியங்கள் பயிரிடப்படும் மொத்த சாகுபடி பரப்பு இந்த பத்தாண்டுகளில் 27 லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டேர் என்ற அளவில் இருந்து 25 லட்சத்து 42 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை வெளியீடு ஒன்றில் இடம்பெற்றுள்ளன. மாநிலத்தின் முக்கிய உணவுப் பயிர்கள் சாகுபடி செய்யும் பரப்பளவு கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது என்பது எதிர்கால உணவுப் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
நகரப் பகுதிகளின் விரிவாக்கம் என்பது வேளாண்மை சாகுபடி பரப்பளவு குறைய மிக முக்கிய காரணமாக உள்ளது. வளர்ச்சித்திட்டங்களின் பெயரால் விளைநிலங்கள் அழிக்கப்படுவதும் மற்றொரு காரணம். இது தவிர நிலத்தடி நீர்மட்டம் குறைவது, நிலத்தடி நீரில் உப்புத் தன்மை அதிகரிப்பது போன்றவையும் முக்கியக் காரணங்கள். இந்த சூழலில் காவிரி டெல்டா மாவட்டங்களில் உத்தேசிக்கப்பட்டுள்ள மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால் மேலும் பல லட்சம் ஏக்கர் நிலம் சாகு படியை இழக்க நேரிடும். ஆகவே, இதுபோன்ற தொழில் திட்டங்களை விவசாய சாகுபடிப் பகுதிகளில் அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
மேலை நாடுகள் எல்லாம் வேளாண்மைத் துறைக்கு அதிக மானியம் வழங்கி வரும் நிலையில், நமது நாட்டில் ஏற்கெனவே வழங்கி வரும் மானியத்தையும் குறைக்கும் நிலை உள்ளது. நீர்ப்பாசனப் பரப்பளவை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதோடு, அறுவடை ஆனவுடன் கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
அறிவியல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும். மண் பரிசோதனை, உரமிடும் முறை உள்ளிட்டவை குறித்து வேளாண்மை விரிவாக்கப் பணியாளர்கள் களத்தில் இறங்கி விவசாயிகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
குறிப்பாக விவசாயிகளுக்கு அதிக மகசூல், விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்து விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்வதன் மூலம் மட்டுமே வேளாண்மைத் துறையைப் பாதுகாக்க முடியும்.
Related Tags :
Next Story