அரியமான் கடலில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் ஆபத்தான குளியல்


அரியமான் கடலில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் ஆபத்தான குளியல்
x
தினத்தந்தி 14 July 2018 4:15 AM IST (Updated: 13 July 2018 10:57 PM IST)
t-max-icont-min-icon

அரியமான் கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் கடலில் இறங்கி ஆபத்தான குளியலில் ஈடுபடுகின்றனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள், ஆன்மிக தலங்கள் உள்ளிட்டவைஏராளமாக உள்ளன. இம்மாவட்ட மக்களை மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும் இடமாக அரியமான் கடற்கரை உள்ளது. ராமநாதபுரம்-ராமேசுவரம் செல்லும் நெடுஞ்சாலையில் உச்சிப்புளியை அடுத்துள்ள பிரப்பன்வலசையில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இடதுபுறமாக செல்லும் சாலையில் சென்றால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் அழகிய அரியமான் கடற்கரையை காணலாம். பாக் நீரிணைப்பின் ஒரு பகுதியில் 150 மீட்டர் அகலமும், 2 கிலோ மீட்டர் நீளமும் உடைய இந்த கடற்கரைக்கு வார இறுதி நாட்களை கழித்திட பெருவாரியான மக்கள் வருகை தருகின்றனர்.

அமைதியான சூழலில் மென்மையான குளிர்காற்று தவழ்ந்து வரும் இந்த கடற்கரையில் கண்ணாடி போன்று பளபளக்கும் கடல்நீரில் தினமும் குளித்து மகிழ்வோர் ஏராளம். குறிப்பாக ராமநாதபுரம், ராமேசுவரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிப்போர் அடிக்கடி வந்து செல்கின்றனர். மேலும் இந்த கடற்கரைக்கு அழகு சேர்க்கும் வகையில் அடர்த்தியான சவுக்கு மரங்களும், தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு இடமும் அமைந்துள்ளது. இங்கு அரசு சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


ராமேசுவரத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா வரும் பயணிகள் குடும்பம் குடும்பமாக அரியமான் கடற்கரைக்கு வந்து இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரையையும், கடலின் அழகையும் ரசிப்பதுடன் கடலில் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவ்வாறு குளிக்கும் சுற்றுலா பயணிகள் குழந்தைகளையும் கடலில் இறங்கி குளிக்க வைக்கும்போது சில நேரங்களில் ஆபத்தில் முடிந்துவிடுகிறது. அரியமான் கடற்கரைக்கு வந்து கடலில் குளிப்பவர்களை எச்சரிக்கும் விதத்தில் ஆங்காங்கே தகவல் பலகை வைக்க வேண்டும் எனவும், குழந்தைகளை கடற்கரையில் விளையாடுவதற்கு அனுமதிக்கும்போது எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் போலீசார் மூலம் அறிவுறுத்த வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story